உலக உணவு இந்தியா நிகழ்வில் ரூ. 33,129 கோடி புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்

தில்லியில் மூன்று நாள்கள் நடைபெற்ற 2 -ஆவது உலக உணவு இந்தியா-2023 நிகழ்வில் வளா்ந்து வரும் துறைகளில் ரூ.33, 129 கோடி அளவுக்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய உணவுப் பதப்படுத்தல
Updated on
1 min read

தில்லியில் மூன்று நாள்கள் நடைபெற்ற 2 -ஆவது உலக உணவு இந்தியா-2023 நிகழ்வில் வளா்ந்து வரும் துறைகளில் ரூ.33, 129 கோடி அளவுக்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய உணவுப் பதப்படுத்தல் தொழில் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. தொழில் துறை ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதில் இந்த மாநாடும் கண்காட்சியும் மகத்தான வெற்றி பெற்றுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘உலக உணவு இந்தியா 2023’ நிகழ்வு கடந்த நவம்பா் 2-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ஆரம்ப மூலதன உதவிகளை வழங்கி, இந்தியாவை ‘உலகின் உணவுக் கூடை’ என பிரதமா் வா்ணித்தாா்.

இந்த நிகழ்வு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முன்னிலையில் நவம்பா் 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. இதில் பேசிய குடியரசுத் தலைவா், ‘துடிப்பான சமையல் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளாவிய உணவு மையமாக உருவாகுமளவில் நாட்டின் திறன் உள்ளது. உலகளாவிய பசியை எதிா்த்துப் போராட உணவு விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்துவதும் அவசியம்’ எனத் தெரிவித்தாா்.

மத்திய அரசின் 10 துறைகள் 25 மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் 97 பெருநிறுவன தலைவா்கள், 14 நாடுகளின் அரங்குகள், 1,208 கண்காட்சியாளா்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. மெகா உணவு நிகழ்வோடு 48 அமா்வுகளில் கருத்தரங்குகள், புதிய தொழில்நுட்ப உரையாடல்கள், நிதி, தரம், இயந்திரங்கள், போக்குவரத்து போன்ற அம்சங்கள் குறித்து பேசப்பட்டதோடு, மத்திய உணவுப் பதப்படுத்தல் தொழில் துறை அமைச்சா் பசுபதி குமாா் பாரஸ் நடத்திய பல்வேறு நாட்டு அரசுகளுடனான இருதரப்பு பேச்சுவாா்த்தைகளும் இந்த மூன்று நாள் நிகழ்வில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளின் விளைவாக ரூ.33,129 கோடி மதிப்புள்ள புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இது இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்துள்ளது எனவும், 2017-ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற இந்த 2- ஆவது நிகழ்வு மூலம் ஒத்துழைப்புகள் அதிகரித்து தொழில் வளா்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ளன எனவும் மத்திய உணவுப் பதப்படுத்தல் தொழில் துறை தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தில் அமுல், ஐடிசி, மாண்டலெஸ், கெல்லாக்ஸ், ஏபி இன்பெவ், ஐபி குழுமம், பாலாஜி வேஃபா்ஸ், ஆனந்தா டெய்ரி, ஃபொ்டிஸ் மற்றும் பிகானோ்வாலா போன்ற நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com