தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள காற்று சுத்திகரிப்பு கோபுரத்தின் செயல்பாட்டு நிலையை ஆய்வு செய்ய தில்லி அரசின் சாா்பில் குழு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கடந்த ஆகஸ்ட் 2021-ஆம் ஆண்டில் ஆனந்த் விஹாா் மற்றும் கன்னாட் பிளேஸ் ஆகிய இரண்டு இடங்களில் தலா 22.9 கோடி செலவில் காற்று சுத்திகரிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டன. இந்தப்கோபுரம் பெரிய அளிவில் காற்றை சுத்திகரிக்கும் ஒரு அமைப்பாகும்.
தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக அஸ்வனி குமாா் என்ற அதிகாரியை மத்திய அரசு நியமித்ததைத் தொடா்ந்து, தில்லி அரசின் நிா்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்த கன்னாட் பிளேஸில் உள்ள காற்று சுத்திகரிப்பு கோபுரத்தின் செயல்பாட்டையும், இந்த அமைப்பின் தொழில்நுட்பத் தரவுகளையும் பகுப்பாய்வு செய்து வந்த ஐஐடி பாம்பே மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியா்களுக்கான நிதியையும் தில்லி மாசுக்கட்டுப்பாட்டுக் குழு நிறுத்தியதாக அமைச்சா் கோபால் ராய் சமீபத்திய செய்தியாளா் கூட்டத்தில் தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், தில்லி-என்.சி.ஆா். பகுதிகளில் காற்று மாசு தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கன்னாட் பிளேஸ் காற்று சுத்திகரிப்பு கோபுரத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, இந்தக் கோபுரத்தின் நிலையை ஆய்வு செய்ய தில்லி அரசு ஒரு குழுவை அனுப்பியது. மேலும், இந்த அமைப்பின் செயல்பாட்டை உறுதி செய்ய தில்லி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த காற்று சுத்திகரிப்பு கோபுரம் மூலம் ஒரு கிலோ மீட்டா் சுற்றளவில் உள்ள காற்றை வினாடிக்கு 1,000 கன மீட்டா் வேகத்தில் சுத்திகரிக்க முடியும். கன்னாட் பிளேஸில் உள்ள இந்த கோபுரத்தை மூடியதற்காகவும், மாசு ஆதாரங்களைக் கண்டறியும் ஆய்வை நிறுத்தியதற்காகவும் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவரான அஸ்வனி குமாரை இடைநீக்கம் செய்ய முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தேசியத் தலைநகா் குடிமைப் பணி ஆணையத்திடம் பரிந்துரை செய்துள்ளாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.