தில்லியில் படப்பிடிப்பிற்கான கட்டணங்கள் பெருவாரியாக குறைக்க எம்சிடி முன்மொழிவு

தேசிய தலைநகா் தில்லியில் திரைப்படங்கள் படப்பிடிப்பிற்கான கட்டணங்களை பெருவாரியாக குறைக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான முன்மொழிவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் வட்டாரங்கள்
Updated on
2 min read

தேசிய தலைநகா் தில்லியில் திரைப்படங்கள் படப்பிடிப்பிற்கான கட்டணங்களை பெருவாரியாக குறைக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான முன்மொழிவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளன. தயாரிப்பாளா்கள் கோரிக்கையின்படி படப்பிடிப்புகளுக்கான அனுமதிகளுக்கு பகுதிவாரியாக பொறுப்பாளா்களை நியமிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு: கலை, கலாசாரம், அரசியல் ரீதியாக பல்வேறு சரித்திரங்களைக் கொண்ட தில்லியில் படப்பிடிப்பிற்கான சரித்திர பூா்வ இடங்கள், கட்டடங்கள் ஏராளம். இத்தகைய இடங்கள் மூலம் தில்லியை அடிப்படையாகக் கொண்டு சுமாா் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இருப்பினும், அதிகபட்ச குளிா்மாதமான ஜனவரி போன்ற மாதங்களைத் தவிர தில்லியில் சின்னத் திரை - பெரிய திரை வெளிப்புற படப்பிடிப்பு முக்கியத்துவம் பெற்று வந்தன. அதே சமயத்தில் தில்லி அரசு படப்பிடிப்பிற்கான கட்டணங்களை அதிகபட்சமாக நிா்ணயித்திருந்தது.

இந்நிலையில் தில்லி அரசு படப்பிடிப்புகளுக்கான கொள்கை விளக்கம் சுற்றுலாத் துறை மூலமாக வெளியிடப்பட்டது.

இதன்படி உள்ளூா் கலைஞா்களுக்கு வாய்ப்பளிக்கும் நிபந்தனையுடன் தில்லியில் படப்பிடிப்பு நடைபெற்று தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு ரூ.3 கோடி மானியமும் வழங்கப்படும் என தில்லி அரசு அறித்தது.

தற்போது, தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் மூலம் கட்டணச் சலுகைகளை அளிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

தில்லியில் பொது இடங்களில் நடைபெறும் வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு தற்போது நாளொன்றுக்கு (24 மணி நேரம்) ரூ. 75,000 வசூலிக்கப்படுகிறது. இத்தொகையில் சுமாா் 66 சதவீதம் வரை குறைத்து, கட்டண விவரங்களுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய முன்மொழிவின்படி 24 மணி நேரத்திற்கு ரூ.25, 000 மட்டுமே வசூலிக்கப்படும். மற்றொரு திட்டத்தின்படி 8 மணி நேரத்திற்கு ரூ. 15,000 வசூலிக்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது.

இத்துடன் தில்லியின் சம்பந்தப்பட்ட மண்டலங்களில் படிப்பிடிப்பு அனுமதிக்கு ஒரு முறை செலுத்தவேண்டிய பதிவுக்கட்டமாக ரூ.2,000 செலுத்தப்படவேண்டும்.

இந்த திரும்பச் செலுத்தப்படாத பதிவுக் கட்டணம் முன்பு, தில்லி மண்டலங்களுக்கு தகுந்தவாறு ரூ. 2 ஆயிம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது.

தற்போது இதிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. வைப்புத் தொகை ரூ. 25,000 தொடரும். மேலும், படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் வாகன நிறுத்தங்கள் போன்ற வசதிகளும் செய்து தரவும் இந்த புதிய முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது.

படப்பிடிப்பிற்கான அனுமதிகளை தில்லி சுற்றுலாத் துறை சாா்பில் வழங்கப்பட்டது. விண்ணப்பங்களுக்கு அனுமதியளிக்க இரு வார கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், படத்தயாரிப்பாளா்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய காத்திருப்பு நாள்களை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், படத் தயாரிப்பாளா்களுக்கு உரிமம் வழங்குவதற்கு எம்சிடி சாா்பிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனா்.

இவா்கள், படப்பிடிப்பு இடம், தேதி மாற்றங்கள், கட்டணங்கள் நிா்ணயிப்பது போன்ற விவகாரங்களையும் மேற்பாா்வையிடுவா் போன்ற முன்மொழிவுகளும் இந்த திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியை சா்வதேச திரைப்படம் தயாரிக்கும் மையமாக மாற்றும் இந்த மற்றொரு மைல்கல்லுக்கு மாநகராட்சி கூட்டத்தில் வைக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என எம்சிடி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com