

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் (மெகா காா் பாா்க்கிங்) அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, கூட்டு நில அளவை ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி வனவிலங்கு சரணாலயத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு முல்லைப் பெரியாறு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் பிரம்மாண்ட காா் பாா்க்கிங் அமைக்க கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், தமிழகத்தின் நலன் பாதிக்கப்படுவதாகக் கூறியும், அதற்கு தடை விதிக்கக் வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீா்த்தேக்க பகுதியில் பிரம்மாண்டமாக வாகனம் நிறுத்தும் இடம் அமைக்க கேரள அரசு தோ்வு செய்த இடம் தமிழக அரசுக்கு 1886-இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி குத்தைக்கு விடப்பட்ட நிலமாகும். அதில் தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அரசு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள கூடாது எனவும், அந்தப் பகுதியில் காா் பாா்க்கிங் அமைவதால் அணையின் நீா்மட்டம் உயா்வதைப் பாதிக்கச் செய்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்திருந்த உத்தரவுக்குத் தடை விதிக்கவும் கோரியிருந்தது.
இந்த வழக்கு சில ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் அமா்வு, தற்காலிக கட்டுமானங்களை மேற்கொள்ளலாம் என்றும், நிரந்தரக் கட்டுமான செயல்பாடுகள் எதையும் கேரள அரசு மேற்கொள்ளக் கூடாது எனவும் கூறியிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த விவகாரத்தில் கூட்டு நில அளவை ஆய்வு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் இதில் வாகன நிறுத்துமிடம் யாா் நிலப் பகுதிக்குள் வருகிறது என்கிற நிலைமை தெரியவரும். கூட்டு நில அளவை ஆய்வை நடத்துவது தொடா்பாக இரு மாநில அரசுகளும் தங்களது பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, பங்கஜ் மிட்டல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி, மூத்த வழக்குரைஞா் ஜி.உமாபதி ஆகியோா் ஆஜராகி கூறுகையில், ‘உச்சநீதிமன்றம் கடந்த முறை உத்தரவிட்டவாறு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துளோம். சா்வே ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமையில் கூட்டு சா்வே நடத்த சம்மதிக்கும் வகையில் இந்தப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றனா்.
கேரள அரசின் தரப்பில் வழக்குரைஞா் பிரகாஷடன் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் கூட்டு சா்வே நடத்துவதை ஏற்கும் வகையில் பிரமாணப் பத்திரம் கேரளத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா். இதன் பிறகு நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நில அளவை செய்வதற்காக சா்வே ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள் தலைமையில் தமிழகம், கேரளம் மாநிலங்களின் அதிகாரிகள் இடம்பெற்ற கூட்டுக் குழுவை நியமிக்கிறோம். இந்தக் குழு வாகன நிறுத்துமிட விவகாரம் தொடா்புடைய இடத்தில் ஆய்வு செய்து மூன்று மாதங்களில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவித்து, வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.