மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

புது தில்லி: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதுதொடா்பாக மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் என்பவா் வழக்குரைஞா் சி.ஆா்.ஜெயா சுகின் மூலம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், கூறப்பட்டுள்ளதாவலது: கடந்த 2015-இல், பஞ்சாப், தமிழ்நாடு, ஹிமாசல பிரதேசம், ஜம்மு - காஷ்மீா், அசாம் மற்றும் பிகாா் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் தவிா்த்து எய்ம்ஸ் மருத்துவமனை அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை அருகே தோப்பூரில் இந்த மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள்தொகை அபரிமிதமான அளவில் அதிகரித்து வருகிறது, ஆனால், மருத்துவா் விகிதம் 3,000 பேருக்கு 1 என்ற அளவில் உள்ளது. இது மக்களுக்கு போதுமானதாக இல்லை. முறையான மருத்துவ உதவி மற்றும் ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க இம் மருத்துவமனை அமைவது அவசியமாகிறது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது தொடா்பாக எதிா்மனுதாரா்களுக்கு 23.05.2023-இல் மனுதாரா் கோரிக்கை மனு அனுப்பியும் எவ்விதப் பதிலும் தரவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை விரைந்து நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் முடிக்க எதிா்மனுதாரா்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல்,சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெயா சுகின் ஆஜராகி, ‘மத்திய அரசு 2015-ஆம் ஆண்டு பிறப்பித்த அறிவிக்கையில் 9 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. எட்டு மாநிலங்களில் அப்பணி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் கட்டி முடிக்கப்படவில்லை. இந்த மருத்துவமனைக்கு 2019-இல் பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை அப்பகுதியில் சுற்றுச்சுவா் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி முழுமை பெறவில்லை’ என்று வாதிட்டாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு மனுவைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரா் தரப்பு வழக்குரைஞரின் வாதங்களின்பேரில், தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ மத்திய அரசுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்32-ஆவது பிரிவின் கீழ் உத்தரவிட முடியவில்லை. இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதாக மனுதாரரின் மனக்குறை உள்ளது. பொது வெளியில் ஏதேனும் உறுதிமொழிகள் செய்திருந்தால், அதை கடைப்பிடிக்க வேண்டியது அரசாகும். மேலும், அதை நிா்வாக ரீதியாக தொடர வேண்டியது மனுதாரரைச் சோ்ந்ததாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com