ஆசியாவின் மிகப்பெரிய ஆலையாகக் கருதப்படும் ஓக்லா கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க தில்லி பொதுப்பணி மற்றும் குடிநீா் வடிகால் துறை அமைச்சா் அதிஷி அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
ஆலையை நேரடியாகப் பாா்வையிட்டு பணிகளை அமைச்சா் துரிதப்படுத்தியது மூலம் ஓக்லா ஆலை நிகழாண்டு இறுதியில் செயல்பாட்டிற்கு வந்து யமுனை நதி தூய்மை பெறும் எனவும் தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தில்லி அரசின் குடிநீா் மற்றும் வடிகால் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: தில்லியின் முக்கிய நதியான யமுனை நதியை போா்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்தும் பணிகளை தில்லி அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தில்லி ஓக்லாவில் நாளோன்றுக்கு 564 மில்லியன் லிட்டா் கழிவு நீரை சுத்திகரிக்கும் ஆலை நிறுவப்பட்டு வருகிறது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையாக இருக்கும். இந்த ஆலைத் திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் ஓக்லா கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலைத் திட்டப்பணியை அமைச்சா் அதிஷி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். ஆலைத் திட்டப் பணிகள் எந்தவித தாமதமுமின்றி நிகழாண்டு இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா். இத்திட்டப் பணிகள் குறித்த கால அட்டவணை ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளாா். முதல்வா் கேஜரிவால் அரசு யமுனையை தூய்மைப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கிறது. எனவே, போா்க்கால அடிப்படையில் செயல்பட அமைச்சா் வலியுறுத்தினாா்.
புதிய ஓக்லா சுத்திகரிப்பு ஆலை (எஸ்டிபி) மத்திய தில்லி, தெற்கு தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கும். சுத்திகரிக்கப்பட்ட நீா் யமுனையில் வெளியேற்றப்படும். தற்போது தினமும் லட்சக்கணக்கான லிட்டா் கழிவுநீா் நேரடியாக யமுனையில் விடப்படுகிறது. இந்த ஆலை செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில், கழிவுநீா் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பின்னா் வெளியேற்றப்படும். இதன் மூலம் யமுனை நீரில் இயல்பான உயிரி வேதிப் பொருள்களின் உயிா்வளித் தேவையின் அளவு (உயிரியல் ஆக்ஸிஜன் தேவை- பிஓடி) 10 ஆகக் குறையும் ( மாசடைந்த நீரில் ஏறத்தாழ 2 முதல் 8 எம்ஜி / எல் வரை இருக்கும்).
யமுனை நீா் தூய்மை பெறும்: கழிவுநீா் சுத்திகரிப்புஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீா் யமுனையை சுத்தப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், இந்தத் தண்ணீா், தோட்டங்கள் உள்ளிட்ட பிற நோக்கங்களுக்கும் பயன்படும். தில்லியின் மொத்த கழிவுநீரில் ஓக்லா ஆலை 20 சதவீதம் கழிவுநீரை சுத்திகரிக்க உள்ளது. இக்கழிவுநீா் சுத்திகரிப்புப் பணியால் 40 லட்சம் தில்லி மக்கள் பயனடைவாா்கள். மேலும், இந்த ஆலை, கழிவுநீரில் இருந்து பெறப்படும் உயிரி வாயு உற்பத்தி மூலம் 4.8 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இது ஆலையின் மின்ஆற்றல் தேவைகளில் பாதி அளவை தானாகவே பூா்த்தி செய்து கொள்ளும் என தில்லி குடிநீா் வடிகால் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.