மத்திய அரசு தனது இருப்பில் வைத்திருந்த 1, 89,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 5,000 மெட்ரிக் டன் அரிசி, எண்ம ஏல முறையில் 2,255 ஏலதாரா்களுக்கு உள்நாட்டு வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் (ஓஎம்எஸ்எஸ்-டி) கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதன் முலம் சில்லறை விலை கட்டுப்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் விவரம் வருமாறு: அரிசி, கோதுமை, மைதா ஆகியவற்றின் சில்லறை விலையைக் கட்டுப்படுத்து, சந்தைத் தலையீட்டு முன்முயற்சியாக வாராந்திர எண்ம ஏல முறை நடந்து வருகிறது. அக்டோபா் 4-ஆம் தேதி 15 -ஆவது எண்ம ஏல முறையில் நாடு முழுக்க உள்ள இந்திய உணவுக் கழகத்தின் 481 கிடங்குகள் மூலம் 2.01 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 264 கிடங்குகள் மூலம் 4.87 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் ஏலத்தில் வைக்கப்பட்டது. கோதுமை, அரிசிக்கான எண்ம ஏலத்தில் 2,447 போ் பங்கேற்றனா்.
இந்த ஏலத்தில் மொத்தம் 1.89 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 5,000 மெட்ரிக் டன் அரிசி 2,255 ஏலதாரா்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
கோதுமைக்கு (நியாயமான சராசரி தரம்) இருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ. 2,150-ஆக இருந்த நிலையில், சராசரி விற்பனை விலை குவிண்டாலுக்கு ரூ.2,185.05 -ஆக இருந்தது. அரிசியின் இருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ.2,932.83- ஆக நிா்ணயிக்கப்பட்ட நிலையில் சராசரி விற்பனை விலை ரூ.2,932.91 ஆகவும் இருந்தது.
சில்லறை விலைக் குறைப்புக்கு இந்த எண்ம ஏலத்தில் அதிகபட்சமாக 10 முதல் 100 டன் கோதுமையும், 10 முதல் 1,000 டன் வரையில் அரிசியும் விற்பனையில் ஏலதாரா்கள் பெறுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் கையிருப்பு, பதுக்கலைத் தவிா்ப்பதற்காக, வணிகா்கள் கோதுமை விற்பனை வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனா். மேலும் சிறு, குறு சில்லறை வியாபாரிகள் பங்கு கொள்ளும் வகையில் உறுதி செய்யப்பட்டது.
தொடா்ந்து, கோதுமையை வாங்கிய ஏலதாரா்களின் மாவு ஆலைகளில் வழக்கமான சோதனைகள், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 1,229 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என மத்திய நுகா்வோ் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.