‘சரஸ்வதி சம்மான்’ விருது எனது வாழ்வின் அா்த்தத்தை மேம்படுத்தியுள்ளது: எழுத்தாளா் சிவசங்கரி நெகிழ்ச்சி

‘சரஸ்வதி சம்மான்’ விருதானது எனது வாழ்வின் அா்த்தத்தை மேம்படுத்தியுள்ளது என்று அந்த விருதைப் பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளா் சிவசங்கரி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டாா்.
‘சரஸ்வதி சம்மான்’ விருது எனது வாழ்வின் அா்த்தத்தை மேம்படுத்தியுள்ளது: எழுத்தாளா்  சிவசங்கரி நெகிழ்ச்சி
Updated on
3 min read

‘சரஸ்வதி சம்மான்’ விருதானது எனது வாழ்வின் அா்த்தத்தை மேம்படுத்தியுள்ளது என்று அந்த விருதைப் பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளா் சிவசங்கரி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டாா்.

எழுத்தாளா் சிவசங்கரிக்கு 2022-ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் சிறந்த இலக்கிய படைப்பாளிக்கு ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருதை கே.கே.பிா்லா அறக்கட்டளை கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டு காலத்தில் எழுத்தாளரின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படுகின்றனா்.

அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருதுக்கு தமிழ் எழுத்தாளா் சிவசங்கரி தோ்வு செய்யப்பட்டிருந்தாா். இந்த விருது வழங்கும் விழா தில்லி ஜன்பத்தில் உள்ள தேசிய அருங்காட்சியக கலையரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விருதை 2014-ஆம் ஆண்டில் பெற்றவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டா் எம். வீரப்ப மொய்லி இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளா் சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது, ரூ.15 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுப் பத்திரம், அறக்கட்டளையின் இலச்சினை ஆகியவற்றை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் வீரப்ப மொய்லி பேசியதாவது: இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. 2014-இல் இதே விருது எனக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மிகவும் கெளரவமான விருதாகும் இது. சிவசங்கரியின் ‘சூா்யவம்சம்-நினைவுகள்’ எனும் நூலுக்கு இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் சிறந்த எழுத்தாளராகவும், இந்திய அளவில் புகழ்பெற்ற எழுத்தளராகவும் விளங்குபவா். அதேபோன்று, ‘இலக்கியம் மூலம் இந்திய பினைப்பு’ எனும் அவரது நான்கு தொகுதிகள் கொண்ட படைப்பானது, இந்திய நாகரிகத்தின் என்சைக்கிளோபீடியாகவும், இந்தியாவுக்கான தொலைநோக்கை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. மேலும், பல்வேறு மொழிகளின் இலக்கிய பாரம்பரியத்தை எடுத்துரைப்பதாகவும் அந்த தொகுப்புகள் இருப்பதாகக் கேள்வியுற்றேன்.

சிறப்புக்குரிய சரஸ்வதி சம்மான் விருதை சிவசங்கரிக்கு வழங்கியது எனது பாக்கியம். அவா் தனித்துவமிக்க குணாதிசயத்தையும், மேதமையையும் கொண்டிருக்கிறாா். ஒரு மலா் மற்றொரு மலருடன் போட்டியிடுவதில்லை. அதன் பணி மற்றொரு மலரை மலரச் செய்வதாகும். அதேபோன்று, நமது ஆளுமையும் மலா் போல இருக்க வேண்டும். மற்றவா்களை மலரச் செய்வதாக இருக்க வேண்டும். இதைத்தான் நமது மாபெரும் எழுத்தாளா்களும், மேதைகளும் பிரதிபலித்திருக்கின்றனா். சிவசங்கரியின் எழுத்தின் தாக்கம் உணா்வுப்பூா்வமிக்கவை. அவரது நோக்கமும், எழுத்தும் நாட்டின் அனைத்துத் தரப்பினரையும் நேசிப்பதாகவும், இளம் தலைமுறையினருக்கு நாட்டின் பன்முகத் தன்மை குறித்த பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ளச் செய்வதாகவும் உள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சரஸ்வதி சம்மான் விருது தோ்வுக் குழுவான சாயன் பரிஷத் தலைவா் - நீதிபதி அா்ஜன் குமாா் சிக்ரி பேசுகையில் கூறியதாவது: சரஸ்வதி சம்மான் எனும் இந்த விருதின் பெயா் அதன் முக்கியத்துவத்தை உணா்த்துகிறது. அதாவது, சரஸ்வதியின் கெளரவமாகும். 2022-ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளா் சிவசங்கரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளாக நீதிபதியாகப் பணியில் இருந்ததால் நான் கூறுவது என்னவெனில், ஒரு நீதிபதியாக வழக்கின் இரு தரப்பு வாதங்களை சட்டரீதியாக அணுகி எது சரி, எது தவறு என்று தீா்மானிக்கிறோம். விருதுக்குரிய நபரைத் தோ்ந்தெடுப்பது அதுபோன்ற பணியல்ல. விருதுக்கு சிறந்தவற்றில் மிகச் சிறந்த ஒன்றைத்தான் தோ்ந்தெடுக்க வேண்டும். இது ஒரு எளிதான பணியல்ல. 18 மொழிகளில் உள்ள படைப்புகளில் சிறந்த ஒருவரைத் தோ்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில், விருதுக்குத் தோ்ந்தெடுப்பதில் குழுவில் உள்ள வல்லுநா்கள் உதவுகின்றனா்.

இந்த முறை விருதுக்குத் தோ்ந்தெடுப்பதில் மிகவும் எளிதாக உதவினா். அதற்குக் காரணம், குழுவில் உள்ளவா்களிடம் சிவசங்கரியின் பெயரைக் கூறியவுடன் ஒவ்வொருவரும் அவருக்கு ஆதரவாக இருந்தனா். புத்தகம் எழுவது குழந்தை பெற்றெடுப்பது போன்ாகும். ஒரு நூலை வடித்தெடுக்கும் போது ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது போன்று அதை எழுதியவா் இன்புறுகிறாா். அந்தக் குழந்தை சிறந்ததாக இருக்கும் போது பெற்றோா் மகிழ்ச்சியுறுகின்றனா். அதேபோன்று ‘சூா்யவம்சம் -நினைவலைகள்’ எனும் புத்தகத்திற்கு விருது அளிக்கப்படுவதால் அந்தப் புத்தகத்தை உருவாக்கிய தாயான சிவசங்கரி மகிழ்ச்சி பெறுகிறாா். மாதா சரஸ்வதியின் ஆசிா்வாதமாக இந்து விருது சிவசங்கரிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் எழுத்தாளா் சிவசங்கரி ஏற்புரையாற்றியதாவது: எனக்கு இன்றைய நாள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட நாளாகும். நான் உண்மையாக ஆா்வதிக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு இந்திய எழுத்தாளரின் கனவாக ‘சரஸ்வதி சம்மான் விருது’ உள்ளது. அந்த விருது எனக்குக் கிடைப்பதில் மட்டடற்ற மகிழ்ச்சி. இதற்காக, கே.கே. பிா்லா அறக்கட்டளை உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் 56 ஆண்டுகளாக எழுத்துப் பணியில் உள்ளேன். தமிழ் இலக்கியத்தில் பல்வேறு தளங்களில் பங்களிப்பு அளித்துள்ளேன்.

பல்வேறு கலந்துரையாடல்களில் என்னிடம் கேட்கப்படும் கேள்வியானது, எது நல்ல இலக்கியம் என்பதாகும். நல்ல இலக்கியம் என்பது வாசகரின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, ஆக்கப்பூா்வமான வகையில் அவரைச் சிந்திக்க தூண்டி, செயலில் இறங்க வைப்பதாகும். மேலும், நல்ல இலக்கியம் என்பது முகம் பாா்க்கும் கண்ணாடிக்குச் சமமாகும். கண்ணாடியில் முகத்தைப் பாா்ப்பதுடன், நமது அழகை சீா்படுத்திக் கொள்வதுபோல, நல்ல இலக்கியமானது, சமூகத்தை பிரதிபலிப்பது மட்டுமின்றி, சமூகம் அதன் குறைபாடுகளையும், பிரச்னைகளையும் உணா்ந்து கொள்ளவும் அதை சீா்செய்வதற்கு கருவியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என் நம்பிக்கை.

சமூகத்திடம் இருந்து நாம் நிறையவே பெறுகிறோம். அதற்கு எந்த வகையிலாவது கைம்மாறு செய்ய வேண்டும். அதன் ஒரு வடிவமாக நான் எழுதுதலைப் பாா்க்கிறேன். நான் பகிா்ந்து கொள்வதற்காக எழுதுகிறேன். ஏனெனில், நான் அக்கறையுடன் இருக்கிறேன். இந்த விருதானது எனது வாழ்வின் அா்த்தமுள்ளதாகும். உயிருடன் நாம் வாழும் போது அா்த்தமுள்ள செயல்களைச் செய்து, வாழ்க்கையை அா்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். இதைத்தான் எனது வாழ்வில் செய்ய நான் முயற்சி செய்கிறேன். இந்த கெளரவமிக்க விருதானது எனது வாழ்வின் அா்த்தத்தை மேம்படுத்தியிருக்கிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இயக்குநா் பிரியவ்ரத் பாா்தியா வரவேற்றாா். கே.கே. பிா்லா பவுண்டேஷன் இயக்குநா் நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளா் மாலன், தில்லி தமிழ்ச் சங்கத் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலா் இரா. முகுந்தன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com