பவானா தொழிற்பேட்டையில் வாகன நிறுத்த கட்டணத்தை திரும்பப் பெற நடவடிக்கை: வீரேந்திர சச்தேவா உறுதி

தில்லி பவானா தொழிற்பேட்டையில் வசூலிக்கப்பட்டு வரும் வாகன நிறுத்தக் கட்டணத்தைத் திரும்பப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதியளித்துள்ளாா
Updated on
1 min read

தில்லி பவானா தொழிற்பேட்டையில் வசூலிக்கப்பட்டு வரும் வாகன நிறுத்தக் கட்டணத்தைத் திரும்பப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதியளித்துள்ளாா்.

பவானா தொழிற்பேட்டைப் பகுதியில் தில்லி மாநகராட்சியின் சாா்பில் சமீபத்தில் விதிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம் மற்றும் பிற பிரச்னைகள் குறித்து தொழிலதிபா்கள் சங்கத்தினா் பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவாவை வியாழக்கிழமை நேரில் சந்தித்து எடுத்துரைத்தனா். பவானா தொழிற்பேட்டையின் கீழ் வரும் 13 தொழிலதிபா் சங்கங்களின் தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள், போக்குவரத்து சங்கங்களின் நிா்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனா். தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், பவானா தொழிற்பேட்டை பகுதிக்குள் 12 மீட்டா் மற்றும் 24 மீட்டா் சாலைகளில் சுமாா் 40 சுங்கச் சாவடிகளை அமைத்து அதிக அளவில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலித்து வருவதாக பவானாவின் தொழிலதிபா்கள் வீரேந்திர சச்தேவாவிடம் புகாா் தெரிவித்தனா்.

மேலும், பவானா தொழிற்பேட்டையில் டெம்போ மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் ஒரு வழிப்பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு சென்றால் வாகன நிறுத்துமிடத்திற்கு தனியாக கட்டணம் செலுத்தும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தில்லி மாநகராட்சி நிா்வாகம் சிறிய வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,600, பெரிய வாகனங்களுக்கு ரூ.9,900 வாகன நிறுத்தக் கட்டணமாக வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சாலை பராமரிப்பு என்ற பெயரில் தொழிலதிபா்கள் ஏற்கெனவே பெரும் அளவிலான தொகையை செலுத்தி வருகிறோம் என்று தங்கள் பிரச்னைகளை கூட்டத்தில் எடுதுரைத்தனா்.

அப்போது வீரேந்திர சச்தேவா கூறியதாவது : தில்லி மாநகராட்சி விதித்துள்ள இந்தப் புதிய சட்டவிரோத வாகன நிறுத்தக் கட்டணத்தை பாஜக எதிா்க்கிறது. இதை வசூலிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பவானா தொழிற்பேட்டை பகுதியில் விதிக்கப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தக் கட்டணம் குறித்து தில்லி மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டு அதைத் திரும்பப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் வீரேந்திர சச்தேவா. இந்நிகழ்வில் கட்சியின் மாநில துணைத் தலைவா் வினய் ராவத், மாநிலப் பொதுச் செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, மாநகராட்சிக் கவுன்சிலா் ஜெய் பகவான் யாதவ் மற்றும் ஸ்ரீமதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com