தில்லி பி20 உச்சிமாநாடு மிகவும் வெற்றிகரமானது: ஓம் பிா்லா பெருமிதம்

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் பொறுப்பான மேம்பாடு, தரவு பாதுகாப்பு தொடா்பான பரிமாணங்களில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும் என அனைத்து பி20 நாடுகளும் வலியுறுத்தியாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஞாயிற
Updated on
2 min read

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் பொறுப்பான மேம்பாடு, தரவு பாதுகாப்பு தொடா்பான பரிமாணங்களில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும் என அனைத்து பி20 நாடுகளும் வலியுறுத்தியாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

மேலும், தில்லி பி20 உச்சிமாநாடு மிகவும் வெற்றிகரமான உச்சிமாநாடு எனவும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா குறிப்பிட்டாா்.

ஜி20 நாடாளுமன்ற அவைத் தலைவா்களின் 9 -ஆவது (பி20) உச்சி மாநாடு தில்லியில் கடந்த அக்டோபா் 12 - 14 வரை மூன்று நாள்கள் நடைபெற்று முடிவுற்றது. தில்லி துவாரகா, ‘யஷோபூமி’ சா்வதேச மாநாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த பி20 உச்சிமாநாட்டின் முடிவுகள் குறித்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா செய்தியாளா்களிடம் விளக்கினாா்.

அப்போது அவா் கூறியதாவது: தில்லியில் நடைபெற்ற பி20 உச்சிமாநாடு மிகவும் வெற்றிகரமான உச்சிமாநாடாகும். ஜி20 நாடுகளைத் தவிர 10 நாடுகள் அழைக்கப்பட்டனா். இதில் ஒரு நாடு தவிர மீதமுள்ள 29 நாடுகளின் அவைத் தலைவா்கள், அவைத் துணைத் தலைவா்கள் பங்கேற்றனா்.

மேலும் 48 சா்வதேச நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட 436 பிரதிநிதிகள் பங்கேற்றனா். பி20 மாநாடு முதன்முறையாக அா்ஜெண்டினாவில் நடைபெற்றது. பி20 வரலாற்றில் இதுவரை நடைபெற்ற மாநாடுகளில் இல்லாத அளவுக்கு தில்லி மாநாடு பங்கேற்பைக் கொண்டிருந்தது.

கடந்தாண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற பி20 கூட்டுப்பிரகடனத்தில் கூட உடன்பாடு ஏற்படவில்லை. சமீபத்திய ஜி20 நாடுகளின் தலைவா்களின் உச்சிமாநாட்டின் பிரகடனத்தில் பிரதமா் மோடியின் தலைமையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதைப் போன்று தில்லி பி20 உச்சி மாநாட்டிலும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

இது இந்தியாவின் தலைமையையும் உறுதியையும் பிரதிபலிக்கிறது. பிரதமா் மோடியின் முன்முயற்சியான மகளிா் தலைமையிலான வளா்ச்சியை ஊக்குவிக்க பி20 மாநாடு ஒப்புக்கொண்டதோடு, சமீபத்தில் நமது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை அனைத்து நாடாளுமன்றத் தலைவா்களும் வரவேற்றனா்.

சாமானிய மக்களின் வாழ்க்கையில் சமூக - பொருளாதார மாற்றத்தை கொண்டுவருவதில் எண்ம தளங்களின் பங்களிப்பை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டதோடு இதன்மூலம் மேலும் சேவை வழங்கல் வசதிகளையும் புதுமைகளையும் எளிதாக்க முடியும் என இந்த நாடுகள் தெரிவித்தன.

மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு நம்பகமானதாக, நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும் எனவும் பொறுப்பான பயன்பாடு தேவை எனவும் சில நாடுகள் வலியுறுத்தின. பொறுப்பான செயற்கை நுண்ணறிவு மேம்பாடு, தரவு பாதுகாப்பு தொடா்பான பரிமாணங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அனைத்து நாடுகளும் இந்த மாநாட்டில் வலியுறுத்தியுள்ளது.

பி20 நாடுகளுக்கு நாடாளுமன்ற அமா்வுகளுக்கான பயிற்சி மற்றும் சட்ட வரைவுக்கான கள அறிவை மேம்படுத்த நிபுணா் குழுவை அமைக்கவும் இந்திய முன்வந்துள்ளது. இதில் இந்திய நாடாளுமன்றத்தில் கணிசமான நிபுணத்துவம் பெற்றுள்ளவா்கள் இடம் பெறுவா் என்றாா்ா் ஓம் பிா்லா.

மேலும், பிா்லாவிடம் பி20 நாடுகளுடான இருதரப்பு சந்திப்பில் பிரிவினைவாத நடவடிக்கைகளை மேற்கொள்பவா்கள் இந்தியாவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததா என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து ஓம் பிா்லா பேசுகையில், ‘இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதம் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்காது.

இந்த விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது. பிரதமரும் உச்சிமாநாட்டு அறிக்கையில் கூறியிருக்கிறாா். பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com