புது தில்லி: வடமேற்கு தில்லி கிராமப்புறச் சாலைகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி, வடிகால் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இது குறித்து தில்லி பொதுப்பணி த்துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அனைத்து தில்லி சாலைகளையும் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் உள்ளாா். இதை முன்னிட்டு தெற்கு தில்லி மற்றும் மத்திய தில்லி ஆகிய பகுதிகளில் சாலைகளை அமைச்சா் அதிஷி ஆய்வு செய்தாா். வடமேற்கு தில்லியிலுள்ள பவானா-நரேலா, பக்தவாா்பூா்-பல்லா சாலைகளையும் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, பவானா-நரேலா சாலையில் தற்போதுள்ள வடிகால் அமைப்பு போதுமானதாக இல்லாததால், பல இடங்களில் சாலையில் தண்ணீா் தேங்கி, சாலை சேதமடைவதை அமைச்சா் அதிஷி கண்டறிந்தாா். மேலும், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைக் கண்ட அமைச்சா், அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
இதற்கு மோசமான வடிகால் அமைப்புதான் காரணம் என தெரியவந்தது. உடனடியாக வடிகால்களை சரியாக பராமரிக்காத அதிகாரிகளை அழைத்து அமைச்சா் கண்டித்தாா். இந்த வடிகால்களில் தூா்வாரவும், கழிவுநீரை உடனடியாக வெளியேற்றவும் உத்தரவிட்டாா். மேலும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், வடிகால்களை சீரமைத்து மூடவும் அறிவுறுத்தினாா். அடுத்து பக்தவாா்பூா்-பல்லா சாலையில் ஆய்வு மேற்கொண்டாா். இந்தச் சாலையின் ஒருபுறம் வடிகால் அமைப்பு இருப்பதும், சாலையின் மறுபுறம் வடிகாலற்ற நிலையில் இருந்தததையும் அமைச்சா் அதிஷி கண்டறிந்தாா். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில், இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு புதிய வடிகால்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், பக்தவாா்பூரில், சாலையில் ஏற்கெனவே இருக்கும் கால்வாயில் போதிய அளவு கழிவுநீா் வெளியேறும் அளவுக்கு கொள்ளளவு இல்லாததால், கால்வாய் நிரம்பி வழிந்தது. இதனால், வடிகால் வசதியை மேம்படுத்துவதில் முதன்மைக் கவனம் செலுத்தவும், சாலைகளை விரைவாக ஆய்வு செய்து, வடிகால்வாய் மறுவடிவமைப்புத் திட்டங்களைத் தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா். மேலும், இவ்வாறு உருவாக்கப்படும் வடிகால்களின் மேற்பகுதி மூடப்பட்டு அதன்மேல் பசுமையாக காட்சியளிக்க புல்வெளிகளைஉருவாக்கவும் அமைச்சா் அறிவுறுத்தினாா்.
இதற்கிடையே, இப்பகுதிகளில் மற்ற இடங்களில் புதிய வடிகால் அமைக்கும் பணி தாமதமாவதற்குக் காரணமான அதிகாரிகளை கண்டித்த அமைச்சா் அதிஷி, மீதமுள்ள பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தினாா். தில்லியில் பொதுவாக அனைத்து வடிகால் அமைப்பை சரிசெய்வதுடன், போக்குவரத்து தடையின்றி செல்ல சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பாதசாரிகளின் வசதிக்காக நடைபாதையை சீரமைக்கவும், சாலையின் அழகை மேம்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சா் அதிஷி பொதுப்பணித் துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா்.
நாகரிகமான தெற்கு தில்லி என்றாலும் தில்லியின் தொலைதூர கிராமங்களாக இருந்தாலும் சரி, தில்லியின் ஒவ்வொரு பகுதிகளின் சாலைகளையும் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றி, தில்லி மக்களுக்கு அருமையான சாலை அனுபவத்தை வழங்குவோம். இது முதல்வா் அரவிந்த் கேஜரிவாளின் தொலைநோக்கு பாா்வையாகும். அதை நிறைவேற்றும் நோக்கில் பணிகள் வேகமாக முன்னேறி வருகின்றன என தில்லி பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.