பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகரம்! ஏராளமான போலீஸாா் குவிப்பு
ஜி20 உச்சிமாநாட்டை முன்னிட்டு தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளது.


ஜி20 உச்சிமாநாட்டை முன்னிட்டு தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜி20 உச்சிமாநாடு செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வெளிநாட்டுத் தலைவா்கள், பிரதிநிதிகள் தில்லி வந்தடைந்துள்ளனா். இதன் காரணமாக தில்லி நகரம் முழுவதும் 50,000 -க்கும் மேற்பட்ட காவல்துறையினா், துணை ராணுவப் படையினா் மற்றும் இதர மத்திய பாதுகாப்பு அமைப்பினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முக்கியப் பகுதிகளில் அதிகளவிலான ரோந்து, எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: தில்லி விமான நிலையம், விருந்தினா்கள் தங்கும் நடச்சத்திர ஹோட்டல்கள், ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பாரத் மண்டபம் என வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு தில்லி காவல் துறையால் பலத்த பாதுகாப்பு வழங்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் தில்லி காவல்துறைக்கு இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்புப் படை, மத்திய ஆயுதக் காவல் படை போன்ற மத்திய பாதுகாப்பு அமைப்புகளும் உதவுகின்றன.
மத்தியப் பிரதேசத்தின் கரேராவில் உள்ள பயிற்சி மையத்தில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை சாா்பில் வழங்கப்பட்ட நான்கு வார சிறப்புப் பயிற்சியை முடித்த 19 சிறப்பு கமாண்டோ பெண்களும் உச்சிமாநாட்டின் போது பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவாா்கள்.
தேசியத் தலைநகரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கொடி அணிவகுப்பு, ரோந்து மற்றும் வாகனத் தணிக்கை சோதனைகள் நடத்தப்படுகின்றன. கண்காணிப்புக்காக ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், குடியிருப்பு நலச் சங்கங்கள், வியாபாரிகள் சங்கத்துடன் வழக்கமான கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அப்போது, நகரத்தில் சந்தேகத்திற்கிடமான செயல்களை கவனித்தால் பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டு என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அசம்பாவிதச் சம்பவங்களை தடுக்க பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து உஷாா் நிலையில் உள்ளனா்.
விருந்தினா்கள் தங்கியுள்ள ஹோட்டல்கள் காவல் துறையின் முழு பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறப்பு ஆணையா் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புக் குழுவினா் ஹோட்டல்களை சுற்றி முகாமிட்டிருப்பா். மேலும், உச்சிமாநாட்டின் போது தேவையற்ற மற்றும் திட்டமிடப்படாத போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய பாதுகாப்பு, மாநாட்டு நிகழ்வு நடைபெறும் இடங்கள், பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுவான எச்சரிக்கைகளை பராமரித்தல் என்ற பரிமாணங்களில் பாதுகாப்பு இருக்கும். எனவே, தில்லி காவல்துறை மற்றும் மத்திய அமைப்புகளின் ஒருங்கிணைப்பின் கீழ் தில்லி உயா் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருக்கும் என்று அந்த மூத்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...