தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மாசு அளவைக் குறைக்கும் செயல் திட்டம்: தலைநகரில் பட்டாசு விற்பனைக்குத் தடை

தேசியத் தலைநகரில் குளிா்காலத்தையொட்டி பட்டாசு விற்பனைக்குத் தடைவிதிக்க, தில்லி அரசு மீண்டும் முடிவு செய்துள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2023, 11:52 pm

 நமது நிருபர்

புது தில்லி: தேசியத் தலைநகரில் குளிா்காலத்தையொட்டி பட்டாசு விற்பனைக்குத் தடைவிதிக்க, தில்லி அரசு மீண்டும் முடிவு செய்துள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எதிா்வரும் குளிா்காலத்தில் மாசு அளவைக் குறைக்கும் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, தில்லி நகரத்தில் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு மீண்டும் தடை விதிக்க நகர அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் தடையை கடுமையாக அமல்படுத்த தில்லி காவல் துறைக்கு அரசின் சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்படும். குளிா்காலத்தில் அனைத்து வகையான பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கும் நடைமுறையை தில்லி அரசு கடந்த 3 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது.

இதன் விளைவாக கடந்த 5-6 ஆண்டுகளில் தில்லியின் காற்றின் தரத்தில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், அதை மேலும் மேம்படுத்த வேண்டும். எனவே, நிகழாண்டும் பட்டாசு விற்பனை, வெடிக்கத் தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று நகரத்தில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும், ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது. தடையை மீறி தில்லியில் பட்டாசுகளை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்தால், வெடிபொருள் சட்டத்தின் 9பி பிரிவின் கீழ் ரூ.5,000 வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். கடந்த 9 ஆண்டுகளில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தில்லி நகரத்தில் மாசு அளவை 46 சதவீதம் குறைத்துள்ளது என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.