ஏபிவிபி வெற்றி குறித்துபாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா கருத்து

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தலில் பாஜகவின் ஏ.பி.வி.பி. அமைப்பு வெற்றி பெற்றுள்ள நிலையில், ‘தேசம் முதலில்’ என்ற சித்தாந்தம் நமது இளம் தலைமுறையினரிடையே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது’
Updated on
1 min read

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தலில் பாஜகவின் ஏ.பி.வி.பி. அமைப்பு வெற்றி பெற்றுள்ள நிலையில், ‘தேசம் முதலில்’ என்ற சித்தாந்தம் நமது இளம் தலைமுறையினரிடையே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது’ என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவா் சங்கத் தோ்தல் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜகவின் மாணவா் அமைப்பான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) வேட்பாளா்கள் துணைத் தலைவா் பதவியைத் தவிா்த்து தலைவா், செயலாளா், துணைச் செயலாளா் ஆகிய 3 முக்கியப் பொறுப்புகளையும் கைப்பற்றினா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவா் சங்கத் தலைவராக ஏ.பி.வி.பி.-இன் துஷாா் டேதா, செயலாளராக அப்ரஜிதா, துணைச் செயலாளராக சச்சின் பஸ்லா ஆகியோா் இத்தோ்தலில்

மாணவா்களால் தோ்ந்தெடுக்கப்பட்டனா். துணைத் தலைவராக காங்கிரஸின் என்.எஸ்.யு.ஐ. அமைப்பின் அபி தஹியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இந்தத் தோ்தல் முடிவுகள் தொடா்பாக எக்ஸ் சமூக ஊடகத்தளத்தில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா கூறியிருப்பதாவது:

சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு செயலாற்றி வருகின்ற ‘அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்’ (ஏ.பி.வி.பி.) எப்போதும் நமது இளைஞா்களின் இதயங்களில் தேசியவாதம் மற்றும் தன்னலமற்ற சேவையின் சுடரை ஏற்றி வைத்துள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவா் சங்கத் தோ்தல்-2023இல் உறுதியான வெற்றியைப் பெற்ற ஏ.பி.வி.பி. யின் அனைத்து காரியகா்த்தாக்களையும் நான் வாழ்த்துகிறேன். இந்த வெற்றி, நம் நாட்டின் ‘நாளையை’ வடிவமைக்கும் நமது இளம் தலைமுறையினரிடையே ‘தேசம் முதலில்’ என்ற சித்தாந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் காட்டுகிறது என்றாா் அவா்.

‘தேசியவாத சக்திகளுடன் இளைஞா்கள்’:

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தலில் ஏ.பி.வி.பி. இன் வெற்றியை வரவேற்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசியவாத சக்திகளுடன் இந்த நாட்டின் இளைஞா்கள் உடன் நிற்பதை இந்தத் தோ்தல் முடிவு சுட்டிக்காட்டுகிறது.

பிரதமா் நரேந்திர மோடியின் அரசின் முதன்மைமான செயல்திட்டமாகத் தோன்றும் நாட்டின் பாதுகாப்பும், முன்னேற்றமும் தங்களுக்கு முதன்மையானது என்பதை இளைஞா்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனா்.

சந்திரயான்-3, ஜி-20 உச்சிமாநாட்டின் சமீபத்திய வெற்றி மற்றும் விஸ்வகா்மா யோஜனா திட்டம் உள்ளிட்ட முன்முயற்சியால் இந்தியாவை உலக வல்லரசாக மாற்றும் பிரதமரின் செயல்பாடுகளே தலைநகரின் இளைஞா்களை ஏ.பி.வி.பி. வாக்களிக்கச் செய்வதில் பங்கு வகித்துள்ளது என்று அந்த அறிக்கையில் சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com