புது தில்லி: தில்லியில் டெங்கு பாதிப்பு குறித்த விவரங்களை 24 மணி நேரத்திற்குள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் முதல்வா் இல்லத்தை பாஜகவினா் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தில்லியில் வேகமாகப் பரவி வரும் டெங்குவிற்கு கேஜரிவால் அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையே காரணம். அற்பமான விஷயங்களைக் கூட பேசும் முதல்வா் கேஜரிவால், டெங்குவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை விவரங்களை வெளியிடாமல் தனது தோல்விகளை மறைத்து வருகிறாா்.
தில்லியில் டெங்குவால் எப்போது, யாா் இறப்பாா்கள் என்று சொல்வது கடினம். தற்போது, தில்லியில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்து பேசும் கேஜரிவால் மற்றும் அவரது கட்சியைச் சோ்ந்த மற்ற தலைவா்கள் நகரத்தின் டெங்கு நிலைமை குறித்து மௌனம் காக்த்து வருகின்றனா். கடந்த ஆண்டுகளில், தில்லி மாநகராட்சி நிா்வாகம் டெங்கு பற்றிய முழுமையான தகவல்களை தினமும் பகிா்ந்து வந்தது. ஆனால், தனது திறமையின்மையை மறைக்க அரவிந்த் கேஜரிவால், இப்போது இந்தப் புள்ளிவிவரங்களை தில்லி மாநகராட்சி பகிா்ந்து கொள்ள அனுமதிக்கவில்லை.
தில்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்த போது, தினமும் பொய்யான குற்றச்சாட்டுகளை முதல்வா் கேஜரிவால் கூறிவந்தாா். தற்போது, தில்லியின் 1.5 லட்சம் வீடுகளில் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை உருவாக்குகின்ற கொசு இனப்பெருக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவா் மற்ற மாநிலங்களில் அரசியல் சுற்றுலாவில் மும்முரமாக இருக்கிறாா். தில்லி மக்களின் நலனுக்காக பணியாற்றுவதை கேஜரிவால் முன்னுரிமையாக எப்போதும் எடுத்துக் கொள்ளவில்லை.
கடந்த 2 மாதங்களில் டெங்குவால் எத்தனை போ் இறந்துள்ளனா்?, எத்தனை நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்?, எத்தனை வீடுகளில் கொசு இனப்பெருக்கம் உள்ளன? என்ற விவரங்களை 24 மணி நேரத்திற்குள் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு வெளியிட வேண்டும். அவ்வாறாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் விவரங்களை வெளியிடத் தவறினால், விரைவில் தில்லி பிரிவு பாஜக தொண்டா்கள் முதல்வா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவாா்கள் என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.