ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது

பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கை (51) அமலாக்கத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
தில்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை கைது செய்து அழைத்து சென்ற அமலாக்கத் துறையினா்
தில்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை கைது செய்து அழைத்து சென்ற அமலாக்கத் துறையினா்

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கை (51) அமலாக்கத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். முன்னதாக, அவரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் 11 மணி நேரம் சோதனை நடத்தினர்.

தில்லி அரசின் சார்பில் கடந்த 2021-2022 நிதியாண்டில் அமல்படுத்தப்பட்ட கலால் கொள்கையில் பெருமளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தில்லி துணை நிலை ஆளுநர்  சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரைத்தார். பின்னர், இந்தக் கலால் கொள்கை தில்லி அரசின் சார்பில் ரத்து செய்யப்பட்டது. எனினும், அமலாக்கத் துறையினர் பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இந்த விவகாரத்தை விசாரித்து வருகின்றனர். 
இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கின் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ள மற்ற சிலரின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

சஞ்சய் சிங்கின் வீட்டில் நடந்த 11 மணி நேர சோதனைக்குப் பிறகு அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அப்போது, அவர் வீட்டின் முன் குவிந்திருந்த நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கெனவே தில்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி தொடக்கத்தில் இருந்தே இந்த ஊழல் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்து வருகிறது. மேலும்,  பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அது தெரிவித்து வருகிறது.

கைது நடவடிக்கை சட்ட விரோதமானது-முதல்வர்: ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளது முற்றிலும் சட்டவிரோதமானது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக "எக்ஸ்' சமூக ஊடகத் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:  

சஞ்சய் சிங் கைது நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது. இந்தக் கைது நடவடிக்கை பிரதமர் மோடியின் பதற்றத்தை வெளிப்படுத்துகிறது. வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு  எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார். மேலும், கைது நடவடிக்கைக்கு முன்பு அளித்த பேட்டியில்  அமலாக்கத் துறையின் சோதனையால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும்  கேஜரிவால் கூறினார்.

சஞ்சய் சிங் மனைவி அனிதா சிங் பேட்டி: தனது கணவரைக் கைது செய்ததற்கான எந்தக் காரணத்தையும் அமலாக்கத் துறையினர் தெரிவிக்கவில்லை என்று சஞ்சய் சிங்கின் மனைவி அனிதா சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக  தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "வீட்டில் உள்ள கணினி, ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால், சோதனையின் முடிவில் எதுவும் கிடைக்கவில்லை. அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே அமலாக்கத் துறை அதிகாரிகள் என் கணவர் சஞ்சய் சிங்கை கைது செய்துள்ளனர். ஆனால், கைது செய்ததற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை' என்றார் அனிதா சிங்.  மேலும், கைது நடவடிக்கைக்கு முன்பு தனது தாயார் காலில் விழுந்து சஞ்சய் சிங் வணங்கிச் செல்லும் காணொலி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

"பாஜகவின் விரக்தியை வெளிப்படுத்துகிறது':  ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளது பாஜகவின் விரக்தியை வெளிப்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி கூறுகையில்,  மனீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்குப் பிறகு மக்களுக்காக குரல் எழுப்பிய சஞ்சய் சிங்கையும்  பாஜக அரசு கைது செய்துள்ளது.  வரும் மக்களவைத் தேர்தலில் "இந்தியா' கூட்டணியிடம் தோல்வி அடையப் போகும் விரக்தியில் இந்த கைது நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது என்றார் அமைச்சர் அதிஷி. 


ஆதாரமின்றி கைது செய்யப்பட்டுள்ளேன்'

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்படுவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட விடியோ ஒன்றை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:  நான் மரணத்தைத் தழுவினாலும், தலைகுனிந்து போக மாட்டேன். அதானியின் ஊழலை வெளிக்கொண்டு வந்து அமலாக்கத் துறையிடம் ஏராளமான புகார்களைக் கொடுத்தேன். ஆனால், அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  2024 மக்களவைத் தேர்தலில் மோசமான முறையில் பிரதமர் மோடி தோல்வியைச் சந்திப்பார்.

வன்முறையைக் கட்டவிழ்த்தும், எதிரிகளை சிறையில் தள்ளியும் தேர்தலில் அவர்களால் (பாஜக) வெற்றி பெற முடியாது. ஏற்கெனவே அதானி ஊழல் குறித்து பேசியிருக்கிறேன். ஊழல் தொடர்பாக தொடர்ந்து குரல் எழுப்புவேன். நாங்கள் அரவிந்த் கேஜரிவாலின் சிப்பாய்கள்;  எந்தவொரு ஆதாரமுமின்றி என்னை அமலாக்கத் துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர் என்று அந்த விடியோவில்  சஞ்சய் சிங் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com