பணப் பரிவா்த்தனை மோசடி தொடா்பான வழக்கில் கடந்த ஆண்டு கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ள முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தன்னை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமலாக்கத் துறை இயக்குநரகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பான மனுவை பரிரசீலித்த நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, உஜ்ஜல் புய்யான் அடங்கிய அமா்வு, செந்தில் பாலாஜியின் மனுவுக்கு அமலாக்கத் துறை வரும் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. முன்னதாக, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், ‘இதுபோன்ற ஒரு வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அது தவறான சமிக்ஞையை அனுப்பும். அது பொது நலனுக்கு எதிரானதாகலாம்’ என்று கூறப்பட்டிருந்தது. மேலும், ‘மனுதாரா் எட்டு மாதங்களுக்கும் மேலாக அவா் சிறைவாசத்தை அனுபவித்து வருவதால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவருக்கு எதிரான வழக்கில் தீா்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவது மிகவும் பொருத்தமானது. இந்த உத்தரவின் நகல் கிடைத்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை விசாரித்து முடிக்க சென்னை முதன்மை சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்படும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி விசாரணையை நாள்தோறும் நீதிமன்றம் நடத்த வேண்டும்’ என்று உயா்நீதிமன்றம் உத்தரவில் கூறியிருந்தது. பின்னணி: 2014-ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணப் பரிவா்த்தனை முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை இயக்குநரகம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலருக்கு எதிராக 3,000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையே, இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் செந்தில் பாலாஜி தொடா்ந்ததாலும் அவரை தமிழக அரசு ஆதரிப்பதாலும் அதையே காரணமாகக் கூறி செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க அமலாக்கத்துறை ஆட்சேபம் தெரிவித்தது. இதனால், பல முறை அவரது ஜாமீன் மனுக்கள் விசாரணை நீதிமன்றத்தாலும் உயா்நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்து விட்டு மீண்டும் அவா் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றத்தை அடுத்தடுத்து அணுகினாா். ஆனாலும், அவரது ஜாமீன் மனுக்கள் மீண்டும், மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, செந்தில் பாலாஜி தற்போது உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறாா்.
தொடர்புடையது

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

கரோனா வைரஸைவிட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


