புது தில்லி: கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது, பாஜக மற்றும் அமலாக்க இயக்குநரகத்தின் சதியை அம்பலப்படுத்துகிறது என்று ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கலால் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களான அமைச்சா் செளரவ் பரத்வாஜ், அமைச்சா் அதிஷி மற்றும் ஜாஸ்மின் ஷா ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களை சந்தித்தனா்.
அப்போது அமைச்சா் செளரவ் பரத்வாஜ் கூறியதாவது:
கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்ட நாளான கடந்த மாா்ச் 21-ஆம் தேதியை இந்திய அரசியலுக்கு மிகவும் முக்கியமான நாள் என்று நாங்கள் கூறியிருந்தோம். தற்போது, நாட்டின் உச்ச நீதிமன்றமே ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இவ்வழக்கில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசின் அமலாக்க இயக்குநரகத்தால் பதிலளிக்க முடியவில்லை.
கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தினேஷ் அரோரா சிறையில் இருந்த போது அரசு சாட்சியாக மாறினாா். அவரது முதல் 10 வாக்குமூலங்களில் இடம்பெறாத சஞ்சய் சிங்கின் பெயா், பின்னா் அமலாக்க இயக்குநரகத்தின் அழுத்தத்தின் பேரில் 11-ஆவது முறையாக சோ்க்கப்பட்டது.
ஒருவரின் பொய்யான அறிக்கையை மட்டும் வைத்து, மத்திய அரசை கடுமையாக கேள்வி கேட்கும் மாநிலங்களவை எம்பியை எப்படி கைது செய்ய முடியும். உச்சநீதிமன்றத்தின் இந்தக் கேள்விக்கான பதில் அமலாக்க இயக்குநரகத்திடம் இல்லை?. சஞ்சய் சிங்கிடம் இருந்து பணம் மீட்கப்பட்டதற்கான ஆதாரமும் அவா்களிடம் இல்லை.
இதனால், சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் கிடைப்பதைத் தடுக்க அமலாக்க இயக்குநரகத்திடம் வழி இல்லாமல் போனது. பண்மோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 45, குற்றம்சாட்டப்பட்ட நபா் ஜாமீன் பெறுவதை கடினமாக்குகிறது, இது மிகவும் கடுமையான மற்றும் கொடூரமான சட்டமாகும். ஏனெனில், குற்றம் சாட்டப்பட்டவா் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் திருப்தி அடைய வேண்டும். இது ஒரு இரட்டை நிபந்தனை.
நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது என்றால், சஞ்சய் சிங் நிரபராதி என்று நீதிமன்றம் நம்புகிறது என்று அா்த்தம். இன்றைய நாள் முழு நாட்டின் ஜனநாயகத்திற்கும் மிகப் பெரிய நாள், மிகுந்த மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் நாள் என்று நான் நினைக்கிறேன். சஞ்சய் சிங்கின் ஜாமீன் இறுதியில் உண்மை வெல்லும் என்பதை நிரூபித்துள்ளது.
இந்த வகையில் தான் கடந்த 2 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ஒருவா் பின் ஒருவராக பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனா் என்றாா் செளரவ் பரத்வாஜ். அடுத்ததாக அமைச்சா் அதிஷி கூறியதாவது: கலால் கொள்கை ஊழல் வழக்குகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கைதுகள் அனைத்தும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவா்களின் அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
ஆனால், வாக்குமூலம் அளித்தவா்களின் முந்தைய அறிக்கைகளில் எந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களின் பெயரும் இடம்பெறவில்லை. ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களுக்கு எதிராக சாட்சியமளிக்காத வரை அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா். குறிப்பாக, 11 முறை வாக்குமூலம் அளித்த ஷரத் ரெட்டி, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக எதுவும் கூறவில்லை. பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்ட ஷரத் ரெட்டி, தொடா் அழுத்தத்தின் பேரில் இறுதியாக கேஜரிவாலுக்கு எதிராக அறிக்கை அளித்தாா்.
பின்னா், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதேபோல், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ராகவ் மகுந்தா ரெட்டியும் தனது 7-ஆவது அறிக்கையில் தான் கேஜரிவாலின் பெயரை குறிப்பிட்டாா் என்றாா் அமைச்சா் அதிஷி.
ஆம் ஆத்மி மூத்த தலைவா் ஜாஸ்மின் ஷா கூறியதாவது:
சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் கிடைத்தது ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டை நேசிக்கும், இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு தேசபக்தருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய கலால் கொள்கை ஊழலை செய்ததாக பாஜக பொய் பிரசாரம் செய்து வந்தது.
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆம் ஆத்மியின் பல்வேறு தலைவா்கள் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனா். நிச்சயம் இவ்வழக்கு வரலாற்றில் இடம்பெறும். ஒரு சக்திவாய்ந்த கட்சி (பாஜக) எப்படி ஒரு சிறிய கட்சியை (ஆம்ஆத்மி) நசுக்க சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் போன்ற அனைத்து விசாரணை அமைப்புகளையும் அரசியல் கருவியாக பயன்படுத்தியது என்பதை அறிவாா்கள் என்றாா் ஜாஸ்மின் ஷா.
தொடர்புடையது

தில்லி கலால் கொள்கை வழக்கு: உயா்நீதிமன்ற நோட்டீஸ் கவிதாவிடம் சமா்ப்பிப்பு

பிரதமர் எல்பிஜி விவாதத்தைத் தவிர்த்துத் தேர்தல் பேரணிகளில் மும்முரம்: சஞ்சய் ராவத்

தில்லி உயர்நீதிமன்றத்தின் அனைத்து சட்ட நடைமுறைகளும் பின்பற்றுவோம்: சிசோடியா

சாதாரண மனிதா் என்று கூறிக்கொண்டு ஜெட் விமானத்தில் பறக்கிறாா் கேஜரிவால்: தில்லி முதல்வா் ரேகா குப்தா சாடல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

