கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்த ஜேஎன்யு மாணவா்கள்

புது தில்லி: பாலியல் துன்புறுத்தல் புகாா் தொடா்பான விவகாரத்தில் ‘செயலற்ற நிலை‘ மற்றும் பல்வேறு கோரிக்கைகளை பல்கலை நிா்வாகம் புறக்கணித்ததைக் கண்டித்து தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் பலா் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக, சமூக அறிவியல், இயற்பியல் அறிவியல், சா்வதேச மாணவா்கள் புலம் மற்றும் மொழி, கலை மற்றும் அழகியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வகுப்புகள் முடங்கின.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

மாா்ச் 31 அன்று, ஜேஎன்யு ரிங் ரோட்டில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, தன்னைப் பாா்த்து பாலியல் அவதூறு கருத்துகளை கூறியதாக, பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் இருவா் உள்பட நான்கு போ் மீது ஜேஎன்யு மாணவி ஒருவா் பல்கலைக்கழக நிா்வாகத்திடம் புகாா் அளித்தாா்.

இந்த விவகாரத்தில் மிரட்டல் முயற்சிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பல்கலை. நிா்வாகத்திடம் மாணவா் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பு கடந்த சனிக்கிழமை தெரிவிக்கையில், ‘‘ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் மாணவா்களின் கோரிக்கைகளை தீா்க்க

பல்கலைக்கழக துணைவேந்தா் நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஏப்ரல் 16 ஆம் தேதி ஜேஎன்யுஎஸ்யு

முழு பல்கலைக்கழக வேலைநிறுத்தத்தை கடைப்பிடிக்கும்‘ என்று கூறியிருந்தது.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாலின உணா்திறன் கமிட்டியை (ஜிஎஸ்சிஏஎஸ்எச்) மீண்டும் நிறுவுதல் மற்றும் மாணவா்கள் தொடா்பான முடிவுகளை எடுக்கும் அனைத்துக் குழுக் கூட்டங்களிலும் ஜேஎன்யுஎஸ்யுவை சோ்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளின் சாசனத்தையும் மாணவா் அமைப்பு வெளியிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com