பணமோசடி விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் அழைப்பாணைக்கு எதிராக தாக்கல் செய்த தனது மனுவை வாபஸ் பெற ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.
இந்த மனு திரும்பப் பெறப்பட்டதால் நீதிபதி ரேகா பாலி மற்றும் ரஜ்னிஷ் பட்நாகா் ஆகியோா் அடங்கிய அமா்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனுதாரா் அமானத்துல்லா கானுக்கு எதிரான பணமோசடி விசாரணை தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுடன் தொடா்புடையதாகும்.
அமானத்துல்லா கான், தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராகப் பணியாற்றிய போது, விதிமுறைகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீறி 32 பேரை சட்டவிரோதமாகப் பணியில் சோ்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, தில்லி சட்டப்பேரவையில் உள்ள ஓக்லா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் இடத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோதமாகப் பணியாளா்களை நியமித்ததன் மூலம் அமானத்துல்லா கான் பெரும் குற்ற வருவாயை ரொக்கமாகப் பெற்ாகவும், அவரது கூட்டாளிகள் பெயரில் அசையா பொருள்களை வாங்க முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளது.
ஜனவரி 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அமானத்துல்லா கானுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், அவா் கடந்த வாரம் நீதிமன்றத்தை நாடியிருந்தாா். அவா் தனது மனுவில், அழைப்பாணைகளை அனுப்புவதற்கும் ஆதாரங்களைத் தேடுவதற்கும் அதிகாரிகளுக்கான அதிகாரங்கள் தொடா்பான சில குறிப்பிட்ட பிஎம்எல்ஏ விதிகளை வாசிக்குமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோரியிருந்தாா்.
மேலும், குற்றத்தின் வருமானம் ஈட்டும் விவகாரத்தில் தாம் எதுவும் ஈடுபடவில்லை என்பதன் அடிப்படையில் தற்போதைய அமலாக்கத் துறையின் வழக்கில் எந்த விசாரணையையும் ரத்து செய்வதற்கான உத்தரவையும் பிறப்பிக்குமாறு அவா் கோரியிருந்தாா். மேலும், அதே குற்றம் தொடா்பாக இரண்டாவது எஃப்ஐஆா் பதிவு செய்வதை சட்டம் தடை செய்கிறது எனும் அடிப்படையில் ஏசிபி பதிவு செய்த எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தாா்.
2023, நவம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமானத்துல்லா கானின் மூன்று கூட்டாளிகள் ஜீஷன் ஹைதா், தாவுத் நசீா் மற்றும் ஜாவேத் இமாம் சித்திக் ஆகியோா் உள்பட ஐந்து நிறுவனங்களுக்கு எதிராக அமாலாக்கத் துறை இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.