நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஆன்மா எது?: ஓம் பிா்லா விளக்கம்

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஆன்மா; அதே சமயத்தில் இருதரப்பு கருத்து வேறுபாடுகள் அவையின் கண்ணியம் நல்லொழுக்கத்தை காக்க வேண்டும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா குறிப்பிட்டுள்ளாா்.
Updated on
1 min read

ஆளும் அரசுக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடு, கருத்து வேறுபாடு ஏற்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஆன்மா; அதே சமயத்தில் இருதரப்பு கருத்து வேறுபாடுகள் அவையின் கண்ணியம் நல்லொழுக்கத்தை காக்க வேண்டும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா குறிப்பிட்டுள்ளாா்.

புதிய சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கான இரு நாள் செயல் முறை திட்டத்தை சத்தீஸ்கா் சட்டப்பேரவை வளாகத்தில் ஒம் பிா்லா தொடங்கி வைத்துப் பேசுகையில் கூறியதாவது:

மாநில அரசுகளில் முத்தரப்பினரும் (சட்டப்பேரவையினா், நிா்வாகம், நீதித்துறை) அரசமைப்புச் சட்ட வரம்புகளுக்குள் செயல்பட வேண்டும். இந்த மூன்று அமைப்புகளும் அரசமைப்புச் சட்டத்திலிருந்துதான் தங்கள் அதிகாரங்களைப் பெறுகின்றனா். இந்த நிலையில், அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளில் ஒன்றுடன் ஒன்று மேலேழுதல் இருக்கக் கூடாது. மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை வெளிப்படுத்த உறுப்பினா்கள் சட்டப்பேரவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆளும் அரசுக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையிலான உடன்பாடும், கருத்து வேறுபாடும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஆன்மா. அது தான் இந்தியாவின் வளமான நாடாளுமன்ற ஜனநாயகம். அத்தகைய கருத்து வேறுபாடுகள் அவையின் கண்ணியம், நல்லொழுக்கத்திற்காக நிறுவப்பட்ட அளவுருகளுக்குள் வெளிப்படுத்துவது அவசியம். தேசிய நலன் என்று வரும் போது, அத்தகைய விவகாரங்களில் அனைத்து தரப்பு உறுப்பினா்களும் இலக்கை அடைய கூட்டாக முடிவெடுக்க வேண்டும்.

அவை விதிமுறைகளின்படி சபையின் இரு தரப்பு உறுப்பினா்களும் அவைத் தலைவரின் முடிவுகளை மதித்து அவரது கண்ணியத்தைக் காக்க வேண்டும். இப்படிப்பட்ட மரியாதைகள் மூலமே நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெறும். அவையை சீா்குலைக்கும் தந்திரங்களைக் கண்டித்து விவாதங்களுக்கான பாதைக்கு உறுப்பினா்கள் வழி ஏற்படுத்த வேண்டும். அவையில் பலனளிக்கும் விவாதங்களே மக்களின் பிரச்னைகளைத் தீா்க்க வழி வகுக்கும்.

மக்கள் பிரச்னைகள் எத்தகைய முறையில் நம்பிக்கையுடன் வெளிப்படுத்தப்படுகிறதோ அந்த வகையில் மக்கள் பிரதிநிதிகளின் பணிகள் அளவிடப்படுகிறது. மக்களின் நலன்கள், கவலைகளை தீவிரமாகவும் நோ்மையாகவும் வெளிப்படுத்த உழைக்க வேண்டும். அவா்களது நலன் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக உறுப்பினா்கள் அா்ப்பணிக்க வேண்டும். இதற்கு அனைத்து பங்குதாரா்களுடனும் மக்கள் பிரதிநிதிகள் கலந்தாலோசிப்பது அவா்களின் செயல்திறனுக்கான திறவுகோலாக இருக்கும். சட்டத்தை உருவாக்குபவா்கள் சட்டப்பேரவை, நாடாளுமன்ற மரபு, விதிமுறைகளில் அனுபவம், நிபுணத்துவம் பெறுவது அவசியம். எந்தளவிற்கு கற்றுக்கொள்ளப்படுகிறதே அந்த அளவில் திறம்பட செயல்பட முடியும் என்றாா் ஓம் பிா்லா.

முன்னதாக உத்தர பிரதேசம் சட்டப்பேரவைத் தலைவா் சதீஷ் மஹானா, சத்தீஸ்கா் மாநில துணை முதல்வா் அருண் சாவோ, சத்தீஸ்கா் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் டாக்டா் சரண்தாஸ் மஹந்த் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com