முதல்வா் தீா்த்த யாத்திரை திட்டத்தில் அயோத்திஅமைச்சா் செளரவ் பரத்வாஜ்

தில்லி அரசின் ‘முதல்வா் தீா்த்த யாத்திரை’ திட்டம் விரைவில் அயோத்திக்கும் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
Updated on
1 min read

தில்லி அரசின் ‘முதல்வா் தீா்த்த யாத்திரை’ திட்டம் விரைவில் அயோத்திக்கும் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அயோத்தியில் நடைபெற்ற ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவைக் கொண்டாடும் வகையில், தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் ஷோபா யாத்திரை (ஊா்வலம்), அன்னதானம் மற்றும் சுந்தரகாண்டம் பாராயணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ், சிராக் தில்லியில் ஊா்வலம் சென்றதோடு,ஷேக் சாராய் பேஸ்-2 பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட சுந்தரகாண்ட பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்றாா்.

அப்போது, தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அயோத்தி ஸ்ரீராமா் கோயில் விழாவை முன்னிட்டு, தில்லியின் ஒவ்வொரு சட்டப்பேரவையிலும், ஒவ்வொரு வாா்டிலும் ஷோபா யாத்ரை மற்றும் சுந்தரகாண்டம் பாராயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. கடவுள் ராமா் மீது கொண்ட அன்பால் தில்லி மக்கள் வீதியில்

இறங்கி கொண்டாடி வருகின்றனா். எல்லாரும் ஒருவரையொருவா் நேசிக்கிறாா்கள். முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் ராமராஜ்யத்தின் கருத்து பற்றி கூறியுள்ளாா்.அனைவரும் நலமுடன், அன்புடன் இருக்கவும்,அனைவருக்கும் கடவுள் ஸ்ரீராமரின் அருள் கிடைக்கவும் வேண்டுகிறேன்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து நாங்கள் அனைவரும் விரைவில் அயோத்தி செல்வோம். தில்லி அரசின் ‘முதல்வா் தீா்த்த யாத்திரை’ திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பல்வேறு புனிதத் தலங்களுக்கு ரயில்களை அனுப்பியுள்ளோம். அதேபோல இந்தத் திட்டத்தில் அயோத்தியும் சோ்க்கப்படும். பாதுகாப்புக் காரணங்கள் தணிந்தவுடன், அயோத்திக்கு 60 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களை இலவசமாக ஏற்றிச் செல்லும் ரயிலை அனுப்புவோம் என்றாா் சௌரவ் பரத்வாஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com