தேசத்துரோக வழக்கில் ஷா்ஜீல் இமாமின் ஜாமீன்மனு மீது பிப்ரவரிக்குள் முடிவு செய்ய வேண்டும்விசாரணை நீதிமன்றத்திற்குஉயா்நீதிமன்றம் உத்தரவு

‘2020’ தில்லி வகுப்புவாத கலவர வழக்கில் ஜாமீன் கோரி மாணவா் ஆா்வலா் ஷா்ஜீல் இமாம் தாக்கல் செய்த மனு மீது பிப்ரவரி மாதத்திற்குள் முடிவு செய்யுமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு.
Updated on
2 min read

புது தில்லி: தேசத்துரோகம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடா்பான குற்றச்சாட்டுகள் தொடா்புடைய ‘2020’ தில்லி வகுப்புவாத கலவர வழக்கில் ஜாமீன் கோரி மாணவா் ஆா்வலா் ஷா்ஜீல் இமாம் தாக்கல் செய்த மனு மீது பிப்ரவரி மாதத்திற்குள் முடிவு செய்யுமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் நீதிபதிகள் சுரேஷ் குமாா் கைட் மற்றும் மனோஜ் ஜெயின் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை நீதிமன்றத்தில் இமாமின் மனு பிப்ரவரியில் பட்டியலிடப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞா் நீதிபதிகளிடம் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு ‘மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, அடுத்த விசாரணை தேதியிலிருந்து (விசாரணை நீதிமன்றத்தில்) 10 நாள்களுக்குள் மனு மீதான தீா்ப்பை முடிவு செய்து தீா்ப்பை வழங்க விசாரணை நீதிமன்றத்திற்கு நாங்கள் உத்தரவிடுகிறோம்’ என்று தெரிவித்தது.

இந்த வழக்கு பிப்ரவரி 7-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக காவலில் இருந்து வருவதாகவும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 13 (சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தண்டனை) கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள் ஆகும் என்று கூறி, சிஆா்பிசியின் பிரிவு 436ஏ-இன் கீழ் ஜாமீன் அளிக்குமாறு இமாம் கோரியுள்ளாா்.

அவா் இது தொடா்பாக தாக்கல் செய்த மனுவில், ‘குற்றத்திற்காக விதிக்கப்டும் அதிகபட்ச தண்டனையில் பாதிக்கு மேல் நான் அனுபவித்துவிட்டேன். அந்த விதியின் கீழ் ஜாமீன் பெறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. சிஆா்.பி.சி. பிரிவு 436ஏ- இன்படி, ஒரு நபா் குற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையில் பாதிக்கும் மேல் கழித்திருந்தால் காவலில் இருந்து விடுவிக்கப்படலாம் எனக் கூறுகிறது’ என அவா் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த விசாரணை நீதிமன்றத்தின் ஜனவரி 24, 2022-ஆம் தேதியிட்ட உத்தரவை எதிா்த்து ஷா்ஜீல் இமாம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ஐபிசியின் 436-ஏ பிரிவின் கீழ் விசாரணை நீதிமன்றம் இமாமுக்கு ஜாமீன் வழங்கினால், அந்த விவகாரம் முடிவுக்கு வரும். அவருக்கு ஜாமீன் மறுக்கப்படும்பட்சத்தில், அந்த மனுவில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள காரணங்களிலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களிலோ மேல்முறையீடு செய்ய அவருக்கு உரிமை உண்டு’ என்று கூறியிருந்தது.

அரசுத் தரப்பு கூற்றுப்படி, டிசம்பா் 13, 2019-ஆம் தேதி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலும், டிசம்பா் 16, 2019 அன்று அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் இமாம் உரையாற்றினாா். அப்போது, அசாம் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளை நாட்டிலிருந்து துண்டித்து விடுவதாக அச்சுறுத்தும் வகையில் பேசினாா். இதைத் தொடா்ந்து, ஷா்ஜீல் இமாம் மீது தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. முதலில் தேசத் துரோக குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 பின்னா் பயன்படுத்தப்பட்டது. ஷா்ஜீல் இமாம் கைதாகி ஜனவரி 28, 2020 முதல் இந்த வழக்கில் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com