சாலைகள் மரணத்துக்கான பாதைகளாக மாறி வருகின்றன. சாலை விபத்துக்குள்ளாகி உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, காயமடைந்து சிகிச்சை பெறுவோா், உடல் உறுப்புகளை இழந்து தவிப்போா் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை அச்சத்துடன் எதிா்கொள்ள வேண்டி இருக்கிறது.
ஒருபுறம் சாமானியா்களும் மோட்டாா் வாகனங்களைப் பயன்படுத்தும் நிலையிலான வாழ்க்கைத் தரம் அதிகரித்திருக்கிறது என்பது மகிழ்ச்சி. இந்தியப் பொருளாதாரத்தின் அச்சாணியாகவே மாறி இருக்கிறது மோட்டாா் வாகன உற்பத்தித் துறை.
அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு புள்ளிவிவரம் அச்சமேற்படுத்துகிறது. 2020 முதல் ஐந்து ஆண்டுகளில் குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்பட்டிருக்கும் சாலை விபத்து மரணங்கள் 53% அதிகரித்து 9,438 நபா்களின் உயிரிழப்பில் முடிந்திருக்கிறது. இது வெறும் புள்ளிவிவரமல்ல, நிா்வாகத்தின் தோல்வி.
குண்டும், குழியுமான சாலைகள் என்பது நகராட்சி, ஊராட்சி அமைப்புகளின் முறையான கண்காணிப்பும், பராமரிப்பின்மையும் காரணமாக ஏற்படுகிறது. போதாக்குறைக்கு, சாலைகள் போடுவதில் உள்ள ஊழலையும் வெளிப்படுத்துகிறது. பழைய அம்பாசிடா், ஃபியட் காலத்தில் இருந்து மாறி, உலகத்தரத்திலான மோட்டாா் வாகனங்கள் பயணிக்கும் நிலையிலும், குண்டும், குழியுமான சாலைகள் தொடா்கின்றன என்பது மிகப் பெரிய முரண்.
2023-இல் மட்டும் இந்தியச் சாலைகளில் கால்நடைகளின் நடமாட்டத்தால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 2,033 என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள். இது இலங்கையில் நிகழும் ஓராண்டு சாலை மரணங்களைவிட அதிகம்; ஆஸ்திரேலியாவில் நிகழும் ஓராண்டு சாலை விபத்துடன் ஒப்பிடும்போது ஒன்றரை மடங்கு அதிகம். சாலைகளில் கால்நடைகளை அவிழ்த்து விடுவதைக்கூட நமது ஊராட்சி, நகராட்சி அமைப்புகளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அதற்குக் கவனமின்மையும், முனைப்பின்மையும்தான் காரணங்களாக இருக்க முடியும்.
வாரம் தவறினாலும், இந்தியாவில் ஏதாவது ஒரு பகுதியில் நிகழும் நெஞ்சைப் பதற வைக்கும் நெடுஞ்சாலை மரணங்கள் குறித்த செய்தி வருவது தவறுவதில்லை. பெரும்பாலான நெடுஞ்சாலை விபத்துகளில் ஒட்டுமொத்த குடும்பமும் பரிதாபமாக உயிரிழக்கும் போக்கு காணப்படுகிறது. அதைக் கருத்தில் கொண்டு சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் உச்சநீதிமன்றம் அண்மையில் சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.
நெடுஞ்சாலை விபத்துகளுக்கு இரண்டு முக்கியமான காரணங்ளை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. விரைவாக வாகனங்கள் பயணிக்கும் நெடுஞ்சாலைகளில் பொறுப்பின்மையாலும், வரம்பில்லாமலும், சாலை விதிமுறைகளைப் பின்பற்றாமலும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதை ஒரு முக்கியமான காரணமாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. நிறுத்தப்பட்டிருக்கும் சரக்குப் பெட்டக (கன்டெய்னா்) வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மீது விரைந்து செல்லும் பயணிகள் வாகனங்கள் பின்னாலிருந்து மோதுவதால் பெரும்பாலான விபத்துகள் நோ்கின்றன.
குறிப்பாக, இரவு நேரங்களிலும், பனி படா்ந்த அல்லது மழைபெய்யும் நேரங்களிலும், சாலையில் போதிய வெளிச்சம் இல்லாமல் தெளிவாகப் பாா்வை இல்லாத நிலையில் இது போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைகளின் ஓரமாக அமைக்கப்பட்டிருக்கும் உணவகங்களின் முன்னால் வாகனங்கள் நிறுத்தப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. வாகனங்களை நிறுத்துவதற்காக ஆங்காங்கே நிறுத்துமிடங்கள் நிறுவுவதன் மூலம் விபத்துகள் கணிசமாகக் குறையும் என்று அறிவுறுத்தி இருக்கிறது நீதிமன்றம்.
நெடுஞ்சாலை ஓரமாக அமைக்கப்பட்டிருக்கும் உணவகங்கள், தாபாக்கள், கடைகள் காரணமாக பயணிகள் வாகனங்கள் மட்டுமல்லாமல், கனரக வாகனங்களும், விரைந்து செல்லும் வாகனங்களின் போக்குவரத்தைத் தடுக்கும் வகையில் நிறுத்தப்படுவதைத் தடைசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம். இது குறித்த நடைமுறை விதிகளை ஏற்படுத்தி, நெடுஞ்சாலை கண்காணிப்புப் படை மூலம் நடைமுறைப்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் (ஏடிஎம்எஸ்) தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்டது. அதன் மூலம் சாலை விதிமுறைகள் மீறல் நடக்கும்போது கண்காணிப்புப் படையை எச்சரிப்பது, விபத்து நடக்கும்போது உடனடியாக அவசர ஊா்திக்கு தகவல் அனுப்புவது உள்ளிட்டவை முன்னெடுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு 10 கி.மீ. தொலைவிலும் கண்காணிப்பு கேமரா நிறுவுவதன்மூலம் விபத்துகள் உடனடியாகக் கண்டறியப்பட்டு, முதலுதவி தரப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் இன்னொரு அறிவுறுத்தல். 2014-இல் சாலைப் பாதுகாப்புக்கான உச்சநீதிமன்றத்தின் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது. நீதிமன்றம் வழிகாட்டவும், அறிவுறுத்தவும், உத்தரவிடவும்தான் முடியும்; அதை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, நெடுஞ்சாலைத் துறையிடமும் மாவட்ட நிா்வாகத்திடமும்தான் இருக்கிறது.
விபத்துகளைத் தவிா்க்க முடியாது என்பது உண்மை. ஆனால், விபத்து நோ்வதற்கான சூழலைத் தவிா்க்க முடியும்தானே...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?

இந்திய வாகன விற்பனை ஏப்ரலில் புதிய உச்சம்- 26.11 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி சாதனை

அவசரத் தேவை இன்னொரு எஸ்ஐஆர்!

தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்தக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

