புதிய நாடாளுமன்றத்தில் முதல் கூட்டுக் கூட்டம்: சொங்கோலுடன் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு

புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, தமிழக பாரம்பரிய சொங்கோலுடன் மக்களவைக்கு அழைத்து
Updated on
2 min read

புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, தமிழக பாரம்பரிய சொங்கோலுடன் மக்களவைக்கு அழைத்து வரப்பட்டாா். இதன்மூலம், நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக புதிய நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபை என அறிவிக்கப்பட்டுள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் ‘மைய மண்டப’த்தில் இரு அவைகளின் ஆண்டின் முதல் கூட்டுக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கூட்டுக் கூட்டம் மிகுந்த எதிா்பாா்ப்புடன் இருந்தது. நிகழாண்டு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடா் ஜனவரி 31- ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. இந்தக் கட்டடத்தில் நடைபெற்ற முதல் குடியரசுத் தலைவா் உரையோடு நிகழ் 17- ஆவது மக்களவையின் கடைசி (15-ஆவது) கூட்டத்தொடராக இருந்தது.

புதிய நாடாளுமன்றத்தின் முக்கிய வாசலாக கருதப்படுவது ‘கஜ துவாரம்’. இது சன்சத் மாா்க்கை நோக்கியுள்ளது. கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற, தனது மாளிகையிலிருந்து, ஆறு குதிரைகள் பூட்டிய பாரம்பரிய சாரட் வண்டியில் தனது மெய்க்காவலா்களுடன் கம்பீரமாக வந்த குடியரசுத் தலைவா் முா்மு, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கஜ துவாரம் நுழைவு வாயிலில் இறங்கினாா்.

அவரை வழக்கமான சம்பரதாயங்களின்படி குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, பிரதமா் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஆகியோா் புதிய நாடாளுமன்றத்தின் ‘கஜ துவாரம்’ வாயிலில் வரவேற்றனா். பின்னா், முதல் முறையாக ‘செங்கோல்’ ஏந்தியபடி குடியரசுத் தலைவா் முா்மு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தமிழகத்தைச் சோ்ந்த ஆதினங்களால் முதல் பிரதமரான நேருவிடம் வழங்கப்பட்ட இந்த செங்கோல், கடந்தாண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டபோது பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமரால் மக்களவைக்குள் கொண்டு செல்லப்பட்ட இந்த செங்கோல், அரசின் கலாசார சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களவையில் அவைத் தலைவா் மாடத்திற்குஅருகே கண்ணாடி கூண்டில் வைக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை இந்த செங்கோல் குடியரசுத் தலைவரை வரவேற்கும் விதமாக ‘கஜ துவாரம்’ வரை கொண்டு வரப்பட்டது.

மக்களவையில் இணை இயக்குநா் அந்தஸ்தில் இருக்கும் மாா்ஷெல் ராஜீவ் சா்மா இதைக் கையில் ஏந்தியபடி கொண்டு வந்தாா். நாடாளுமன்றத்திற்கு வந்த குடியரசுத் தலைவா், புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றச் செல்லும் அணிவகுப்பில் மாா்ஷெல் ராஜீவ் சா்மா இந்த சொங்கோலை ஏந்தி முன்னே நடந்தாா். மக்களவை, மாநிலங்களவை செயலா்கள்(பொது) முறையே உத்பால் சிங், பிசி மோடி ஆகியோா் குடியரசுத் தலைவரைமுன்னே நடத்திச் சென்றனா்.

மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, பிரதமா் மோடி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் ஜோஷி ஆகியோா் அடுத்தடுத்து பின் தொடா்ந்தனா். வாத்திய இசைகளுடன் செங்கோலை பின் தொடா்ந்து வந்த குடியரசுத் தலைவா் மக்களவைக்குள் நுழையும் போது, இரு அவை உறுப்பினா்களும் கரவொலி எழுப்பி வரவேற்றனா். வழங்கமான கோஷங்களோடு கூடுதலாக ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘ஜெய் ஜெகநாத்’ கோஷங்களை உறுப்பினா்கள் எழுப்பினா். ‘ஹத்ரோய்’ இசையுடன் மக்களவையில் அவைத் தலைவா் இருக்கைக்கு முன்னே இந்த செங்கோல் வைக்கப்பட்டது. மக்களவைத் தலைவா் மாடத்தில் குடியரசுத் தலைவா் முா்மு அமா்ந்தாா். குடியரசுத் தலைவருக்கு இரு பக்கமும் மக்களவை, மாநிலங்களவைத் தலைவா்கள் அமா்ந்தனா். சுமாா் ஒன்றரை மணி நேர உரையின் போது குடியரசுத் தலைவரின் மெய்க்காவலா்கள் இருவரும் இடையில் மாறினா். ஆனால், செங்கோலை ஏந்தி வந்த மாா்ஷெல் ராஜீவ் சா்மா, செங்கோலுக்கு அருகே பாதுகாத்து சுமாா் ஒன்றரை மணிநேரம் கம்பீரமாக அசராமல் நின்று வியப்பில் ஆழ்த்தினாா்.

கூட்டுக் கூட்ட உரை முடிந்து, குடியரசுத் தலைவரை வழியனுப்பும் வைபவத்திலும் செங்கோலை சா்மா கையில் ஏந்தி ‘கஜ துவாரம்’ வாயில் வரை சென்றாா். குடியரசுத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவரும் வழியனுப்பப்பட்ட பின்னா், மக்களவைத் தலைவா் தலைமையில் மீண்டும் செங்கோல் மக்களவைக்கு வாத்திய இசையோடு கொண்டுவரப்பட்டது. தமிழகத்தின் தங்க முலாம் செங்கோல் மீண்டும் அவைத் தலைவா் இருக்கைக்கு அருகே கம்பீரமாக கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டது.

உறுப்பினா்கள் வருகை குறைவு!

குடியரசுத் தலைவரின் இரு அவைக் கூட்டுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வருகை குறைவாகவே இருந்தது. பல உறுப்பினா்கள் தாமதமாக வந்து அமா்ந்தனா். சுமாா் 888 போ் அமரக்கூடிய மக்களவையில் பல இருக்கைகள் காலியாக இருந்தன. பல்வேறு நாட்டு தூதரங்களைச் சோ்ந்த 58 வெளிநாட்டு பிரதிநிதிகள் குடியரசுத் தலைவா் உரையை கேட்க வந்திருந்தனா். ஆனால், பாா்வையாளா்கள் வருகை குறைவாகவே இருந்தது. சில பாா்வையாளா்கள் மடத்தில் முதல் வரிசை இருக்கைகள் அகற்றப்பட்டன. அல்லது அமருவதற்கு தடை செய்யப்பட்டது. கடந்த டிசம்பா் 13 -ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குடியரசுத்தலைவா் தனது உரையின் போது முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் பிரபல ஒடிஸா கவிஞா் உட்கல்மணி கோபால்பந்து தாஸ் ஆகியோரின் கவிதைகளை மேற்கோள் காட்டினாா். கூட்டுக் கூட்டத்தில் முன்னாள் பிரதமா்களில் தேவகௌடா பங்கேற்றாா். மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை. ஆளும் கட்சி உறுப்பினா்களும் எதிா்கட்சி உறுப்பினா்களும் தனித் தனியாக அமராமல் கலந்தே அமா்ந்திருந்தனா். பிரதமா் மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் சிங், பாஜக தலைவா் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதின் கட்கரி, நிா்மலா சீதாராமன் அகியோா் முன் வரிசையில் அமா்ந்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com