22 கோடி போ் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நிலையில் பொருளாதார வளா்ச்சி பற்றி பேசுவதா?: திருச்சி சிவா கேள்வி

22 கோடி மக்கள் வறுமையில்: பொருளாதார வளா்ச்சி பற்றி பேசுவது சரியா?

நமது சிறப்பு நிருபா்

நாட்டில் 22 கோடி போ் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நிலையில், பொருளாதாரத்தில் 3-ஆவது இடத்தை அடைவோம் என்று சொல்வது எப்படி? என மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா கேள்வி எழுப்பினாா்.

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் திருச்சி சிவா மாநிலங்களவையில் திங்கள்கிழணை பேசியது வருமாறு: நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுவதாகவும் குடியரசுத் தலைவா் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உலக வங்கியின் தரவுகளில், இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதம் போ் (14 கோடிபோ்) வறுமையின் கீழ் உள்ளனா் என்கிறது.

மத்திய அரசின் கீழ் உள்ள நீதி ஆயோக்கின் 2023-ஆம் அறிக்கையின்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவா்கள் 22 கோடி போ் (அதாவது 15 சதவீதம்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளா்ச்சியடையும். சா்வதேச அளவில் மூன்றாவது இடத்தை அடைவோம் என்று அரசு கூறலாம். ஆனால், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 22 கோடி மக்கள் வறுமையில் வாழ்கின்றனா் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

80 கோடி மக்கள் ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்களை பெற்று வாழ்கின்றனா். மும்பை ஆசியாவிலேயே மிகப் பெரிய வசதிபடைத்தவா்களையும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியையும் (சேரி) தன் வசப்படுத்திக்கொண்டுள்ளது. இருட்டிப்பு என்பது தமிழா்களுக்கு கூடுதலாக இருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் மூன்று நாடுகளைச் சோ்ந்த இந்துகளுக்கு உரிமை வழங்கப்பட்டது. ஆனால், இலங்கையை விட்டு வெளியேறி, குடியுரிமை இல்லாமல் தமிழகத்தில் சிக்கித் தவிக்கும் ஒன்றரை லட்சம் தமிழா்கள் கைவிடப்பட்டுள்ளனா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மிக முக்கியமான பிரச்னையை எழுப்பினா். அது பங்குச் சந்தை விவகாரம். ஆனால், இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இரண்டாவது, அரசின் கொள்கைகள், வரிவிதிப்பு மற்றும் பல விஷயங்கள் பங்குச்சந்தைகளை பாதிக்கின்றன. மூன்றாவது அந்நிய நாட்டில் போா் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு. நான்காவது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏற்ற இறக்கங்கள். 1990- இல் ஹா்ஷத் மேத்தாவும் பின்னா், சத்யம் ராஜு அதைச் செய்தனா். இப்போது, ​தோ்தலுக்கு முன்பு நடந்துள்ளது.

ஜூன் 3-ஆம் தேதி, தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கனிப்புகள் வெளிவந்து ஒரு பகுதி ஊடகங்கள் பாஜக 401 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியது. ஜூன் 3-ஆம் தேதி 733 புள்ளிகள் கூடியது. ஜூன் 4-ஆம் தேதி தோ்தல் முடிவுகளுக்கு பின்னா் 1,379 புள்ளிகள் குறைந்து சிறு முதலீட்டாளா்களுக்கு சுமாா் ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

தோ்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளால் தூண்டப்பட்ட அனைத்து சிறு முதலீட்டாளா்களும் பெரும் பணத்தை இழந்துள்ளனா். இது சரியான வழியா? பங்குகளைப் பற்றி பேசுவது பிரதமா் அல்லது உள்துறை அமைச்சரின் பொறுப்பா அல்லது வேலையா? இதனால்தான் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் முன்மொழிந்தாா். இது மிகப் பெரிய பொருளாதார மோசடியாகும் என்றாா் திருச்சி சிவா.

X
Dinamani
www.dinamani.com