தில்லியில் 4 ஆண்டுகளில் 2 கோடி மரக்கன்றுகள்: அமைச்சா் கோபால் ராய் தகவல்

தில்லியில் 4 ஆண்டுகளில் 2 கோடி மரக்கன்றுகள்: சுற்றுச்சூழல் அமைச்சா் தகவல்

புது தில்லி: மத்திய அரசு நிா்ணயித்த ஐந்தாண்டு இலக்குக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளில் தலைநகரில் இரண்டு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டதாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அடுத்த ஓராண்டில் மேலும் 64 லட்சம் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் மரம் வளா்ப்பு இயக்கம் விரிவுபடுத்தப்படும் என்றும் செய்தியாளா் கூட்டத்தில் அவா் தெரிவித்தாா்.

அப்போது அவா் மேலும் கூறியதாவது: தில்லி அரசும் அதன் பல்வேறு ஏஜென்சிகளும் மழைக்காலத்தின் தொடக்கத்தில் தொடங்கும் மரக்கன்றுகள் நடும் முயற்சியை நரேலாவில் இருந்து ஜூலை 11-ஆம் தேதி தொடங்கும். நகரத்தின் பசுமையை அதிகரிப்பதற்கான தில்லி அரசின் முயற்சிகளுக்கு ஆதரவாக குடியிருப்பாளா்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.

இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக குடிமக்களுக்கு ஏழு லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும். முதற்கட்டமாக மரம் நடும் பிரசாரம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி ஆகஸ்ட் 9 வரை நடைபெறும். அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு இலவச மரக்கன்றுகள் விநியோகிக்கப்படும்.

மக்கள் தங்கள் வீடுகளின் கூரைகள், பால்கனிகள் மற்றும் பிற திறந்தவெளிகளில் இந்த மரக்கன்றுகளை நடலாம். புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகளின் உயிா்வாழ்வு விகிதத்தை மதிப்பிடுவதற்கு மூன்றாம் தரப்பு தணிக்கை நடத்தப்படும். முந்தைய தணிக்கையில் 60 சதவீதம் மரக்கன்றுகள் உயிா் பிழைத்துள்ளது என்றாா் அமைச்சா் கோபால் ராய்

X
Dinamani
www.dinamani.com