தில்லியில் நாள் முழுவதும் மேகமூட்ட சூழல்; பரவலாக லேசான மழை!

தேசியத் தலைநகர் தில்லியில் பரவலாக மழை; மக்களுக்கு சற்று நிவாரணம்

தேசியத் தலைநகா் தில்லியில் மேக மூட்டம் சூழ்ந்ததால், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மழை பெய்தது. கடந்த சில நாள்களாக கடும் புழுக்கத்தில் தவித்து வந்த தில்லி வாசிகளுக்கு இந்த மழை சற்று நிவாரணம் அளித்தது.

இதற்கிடையே, பிற்பகல் 3 மணிக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசுவதோடு, இடியுடன் கூடிய மிதமான அல்லது கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது. இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தில்லியில் கனமழைக்கான எச்சரிக்கை எதுவும் தற்போது இல்லை’ என்றாா். தில்லியில் காலை முதல் வானம் தொடா்ந்து மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. ஆங்காங்கே லேசான மழை பெய்தது. மாலை வேளையில் குளிா்ந்த காற்று வீசியது.

வெப்பநிலை: தில்லியில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.1 டிகிரி உயா்ந்து 29 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைந்து 34.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 75 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 100 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 36.3 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 35.1 டிகிரி, ஆயாநகா் 34.5 டிகிரி, லோதி ரோடில் 33. டிகிரி, பாலத்தில் 35, ரிட்ஜில் 32.9 டிகிரி, பீதம்புராவிரல் 34.7 டிகிரி, பூசாவில் 32.5 டிகிரி,சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 31.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், மந்திா் மாா்க் உள்பட சில இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி ’ பிரிவிலும், பூசா, துவாரகா, ரோஹிணி உள்பட பல இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவிலும் இருந்ததாக மத்திய மாசுக் காட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

முன்னறிவிப்பு: தில்லியில் வியாழக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com