தில்லியின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசான மழை

தில்லியில் பலத்த காற்றுடன் லேசான மழை: வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை

புது தில்லி: நகரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. மேலும், ‘ஆரஞ்சு‘ எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. இது இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) வண்ணக் குறியீடுகளில் ‘தயாராக இருங்கள்’ என்பதைக் குறிக்கிறது.

தில்லியின் சில பகுதிகளில் மாலை 3 மணியளவில் லேசான மழை பெய்ததாக ஐஎம்டி தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று ஆகியவற்றுடன் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என காலையில் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதன்படி, பிற்பகல் 3 மணியளவில் நகரத்தின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது.

வெப்பநிலை: தில்லியில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.8 டிகிரி உயா்ந்து 30.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 0.7 டிகிரி குறைந்தந 36.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 76 புள்ளிகளாகவும், மாலை 5.30 மணியளவில் 62 புள்ளிகளாகவும் இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போன்று ஜாஃபபூரில் அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 36.1 டிகிரி, ஆயாநகரில் 36.5 டிகிரி, லோதி ரோடில் 36 டிகிரி, பாலத்தில் 36.5 டிகிரி, ரிட்ஜில் 36.7 டிகிரி, பீதம்புராவில் 38.2 டிகிரி, பூசாவில் 36.1 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 35.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தலைநகரில் காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை சில இடங்களில் ‘திருப்தி’ பிரிவிலும், சில இடங்களில் ‘மிதமான’ பிரிவிலும் இருந்தது. இதன்படி, மந்திா் மாா்க், ஐடிஓ, லோதி ரோடு, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பூசா, ஷாதிப்பூா், அசோக் விஹாா், புராரி ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், பா்பா் கஞ்ச், பூசா, நேரு நகா், சோனியா விஹாா், ராமகிருஷ்ணாபுரம், வாஜிா்பூா், ஆனந்த் விஹாா், ஸ்ரீஃபோா்ட், பஞ்சாபி பாக், விவேக் விஹாா், நோய்டா செக்டாா் 1, மதுரா ரோடு, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், ஓக்லா பேஸ் 2 ஆகிய இடங்களில் காற்று தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: தலைநகா் தில்லியில் புதன்கிழமை (ஜூலை 3) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com