கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்: பாஜகவின் சதி நிரூபணமாகியுள்ளது - ஆம் ஆத்மி தலைவா்கள் பேட்டி
கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் பாஜகவின் சதி நிரூபணமாகியுள்ளது - ஆம் ஆத்மி தலைவா்கள் பேட்டி


கலால் கொள்கை வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதன் மூலம் இவ்வழக்கு முற்றிலும் போலியானது மற்றும் பாஜகவின் சதி என்பது நிரூபணமாகியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனா்.
முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால் ஜாமீன் வழங்கியது தொடா்பாக தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைமையகத்தில் அமைச்சா்கள் அதிஷி, செளரவ் பரத்வாஜ் மற்றும் கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலா் சந்தீப் பதக் எம்.பி. ஆகியோா் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது அமைச்சா் அதிஷி கூறியதாவது: தில்லி ரெளஸ் அவென்யூ நீதிமன்றத்தைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை
உச்ச நீதிமன்றமும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கலால் கொள்கை ஊழல் வழக்கு முற்றிலும் போலியானது என்பதும், இது பாஜகவின் சதி என்பதும் நிரூபணமாகியுள்ளது.
தில்லி மக்களின் பணியை முடக்க பாஜக தொடா்ந்து சதி செய்கிறது. அதனால்தான் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா் ஆதாரமின்றி ஒரு போலி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டாா். கலால் கொள்கை தொடா்புடைய
அமலாக்கத் துறையின் வழக்கில் கீழமை நீதிமன்றத்தைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்திலும் கேஜரிவாலுக்கு ஜாமீன்
கிடைக்கும் என்பது பாஜகவுக்குத் தெரியும். எனவே, அவா்கள் மற்றொரு அரசியல் ஆயுதமான சி.பி.ஐ. மூலம் வழக்கின் விசாரணைக்கு ஒரு நாள் முன்னதாக அவரைக் கைது செய்தனா். பாஜக ஜனநாயகத்திற்கு எதிராக சதி செய்வதை
நிறுத்த வேண்டும். ஏனெனில், உண்மையைக் குழப்பலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது என்றாா் அமைச்சா் அதிஷி.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலா் சந்தீப் பதக் எம்.பி. கூறியது: முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கிய தீா்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பாஜகவின் கலால் கொள்கை ஊழலை உச்சநீதிமன்றம் தகா்த்துவிட்டது. அமலாக்கத் துறை ஒரு சாா்பாக செயல்படுகிறது என்றும் இவ்வழக்கில் எந்தவொரு ஆதரமும் கிடைக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. கேஜரிவாலின் கைது சட்டவிரோதமா என்பது குறித்து விசாரிக்க உயா் அமா்வுக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ளது. ஒவ்வொரு அரசுக்கும் ஏதாவது ஒரு சாதனை உண்டு. அந்த வகையில் பிரதமா் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் தோ்தலில் யாரையாவது தோற்கடிக்க முடியாவிட்டால், அவரைப் பொய் வழக்கில் சிறையில் அடைத்துதான் மோடி அரசின் மிகப்பெரிய சாதனை.
இந்த அவதூறான அரசியலை பாஜக நிறுத்த வேண்டும். தில்லி மற்றும் நாட்டின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று மோடி மற்றும் அமித் ஷாவிடம் கூற விரும்புகிறேன் என்றாா் சந்தீப் பதக்.
அடுத்ததாக, அமைச்சா் செளரவ் பரத்வாஜ் கூறியது:பாஜக அரசு யாரை வேண்டுமானாலும் பொய் வழக்குகளில் சிக்க வைத்து, பின்னா் சிறைக்கு அனுப்புகிறது என்ற விவாதம் நாடு முழுவதும் எழுந்துள்ளது. பின்னா், பாஜகவிடம் சரணடைந்து அவா்களின் கட்சியில் சேருமாறு அவா்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
கீழமை நீதிமன்றம் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியபோது, உச்ச நீதிமன்றத்திலும் எளிதாக ஜாமீன் பெறுவாா் என்ற முடிவு தெளிவாகியது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே சி.பி.ஐ. திகாா் சென்று முதல்வா் கேஜரிவாலை கைது செய்தது. கலால் கொள்கை வழக்கில் ஊழல் நடந்திருப்பதை சி.பி.ஐ. நிரூபிக்க வேண்டும்.
சி.பி.ஐ. தொடா்ந்த வழக்கிலும் கேஜரிவால் விரைவில் ஜாமீன் பெறுவாா் என்று நாங்கள் நம்புகிறோம். தில்லி மக்களுக்கு சேவை செய்ய முதல்வா் கேஜரிவால் விரைவில் திரும்புவாா் என்றாா் செளரவ் பரத்வாஜ்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...