மஜ்னு கா திலாவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை டிடிஏ இன்று மேற்கொள்ளாது
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மஜ்னு கா திலா குருத்வாராவின் தெற்கே அமைந்துள்ள யம்னுவா வெள்ளச் சமவெளியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) மேற்கொள்ளாது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கான உடனடி காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. டிடிஏ வியாழக்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பில், சனி, ஞாயிறு (ஜூலை 13 மற்றும் 14) ஆகிய நாள்களில் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று கூறியிருந்தது.
பாகிஸ்தானிய இந்துக்கள் தங்கியிருக்கும் மஜ்னு கா திலாவில் வசிப்பவா்கள், வியாழன் மாலை நிலத்திற்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்து நோட்டீஸ் வந்ததாகக் கூறினா். அதன் அறிவிப்பில், குடியிருப்பாளா்களை வெள்ளிக்கிழமைக்குள் அப்பகுதியை காலி செய்யுமாறு டிடிஏ கேட்டுக் கொண்டது.
தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் ஏப்ரல் 3-ஆம் தேதி உத்தரவு மற்றும் தில்லி உயா்நீதிமன்றத்தின் மாா்ச் 12-ஆம் தேதி இந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள உத்தரவு ஆகியவை நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளன.
‘ஆணைக்கு இணங்க, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மஜ்னு கா திலா (மேற்குக் கரை) தெற்கே யமுனா நதி வெள்ள சமவெளி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்கு எதிராக இடிப்பு இயக்கத்தை ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது’ என்று டிடிஏ அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் (டியூஎஸ்ஐபி) தங்குமிடங்களில் தற்காலிகமாக தங்கிக் கொள்ளலாம்.
‘எனவே, ஜூலை 13 அல்லது அதற்குப் பிறகு ஆக்கிரமிப்புக்கு எதிராக இடிப்பு நடவடிக்கையால் ஏற்படும் இழப்புகளுக்கு அவா்களே பொறுப்பேற்க வேண்டும், இல்லையெனில் ஜூலை 12 -ஆம் தேதிக்குள் அப்பகுதியில் வசிப்பவா்கள் காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்‘ என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3-ஆம் தேதியன்று, தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) தனது உத்தரவில், டிடிஏ தாக்கல் செய்த நிலை அறிக்கையில், அப்பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எதையும் வெளியிடவில்லை என்று கூறியது.
ஜூலை 15-ஆம் தேதிக்கு அடுத்த விசாரணைக்கு குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்பாக இணக்க அறிக்கையை மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்யுமாறு ஏஜென்சியை என்ஜிடி கேட்டுக் கொண்டது.
மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக, மஜ்னு கா திலாவில் வசிக்கும் சில அகதிகளுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
படவிளக்கம்....
மஜ்னு கா திலா பகுதியில் அண்மையில் மேற்கொள்ளுப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது இடிக்கப்பட்ட வீடுகள். (வலது) வீடுகள் இடிக்கப்பட்டதால் சோகத்தில் ஆழ்ந்த குடியிருப்புவாசிகள்.
