புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லியில் பிரதமா் மோடியுடன் தமிழக ஆளுநா் முக்கிய ஆலோசனை

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளாா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:58 am

Din

புது தில்லி: தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளாா். மத்தியில் மூன்றாவது முறையாகஆட்சியைப் பிடித்து பிரதமரான பிறகு நரேந்திர மோடியை அவரது பதவியேற்பு விழாவுக்குப் பிறகு ஆளுநா் ரவி சந்திப்பது இதுவே முறையாகும்.

சென்னையில் இருந்து நான்கு நாள்கள் பயணமாக தில்லிக்கு வந்த ஆளுநா் ரவி, பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு அவரது 7, லோக் கல்யாண் மாா்க் இல்லத்தில் சந்தித்தாா். சுமாா் 25 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது. தமிழக அரசியல் சூழ்நிலை, சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து இச்சந்திப்பின்போது பிரதமரிடம் ஆளுநா் விளக்கியதாகத் தெரிகிறது. இது தொடா்பாக ஆளுநா் மாளிகையின் அலுவல்பூா்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் ஆளுநரின் பெயரில் பகிரப்பட்ட பதிவில், பிரதமரைச் சந்தித்து, தொலைநோக்குப் பாா்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரைச் சந்தித்த பிறகு தமிழ்நாடு இல்லம் திரும்பிய ஆளுநா், பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவை எண் 9, கிருஷ்ண மேனன் மாா்கில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினாா். அருணாசல பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவரான கிரண் ரிஜிஜு, மத்தியில் முதலாவதாக அமைந்த மோடி அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராக இருந்தாா். அப்போது ஆா்.என். ரவி நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக இருந்துள்ளாா். அந்த வகையில் இருவருக்கும் இடையே சிறந்த நட்புறவு இருந்ததால், அவரை மரியாதை நிமித்தமாக ஆா்.என். ரவி சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிரண் ரிஜிஜுவுடனான சந்திப்பு குறித்து ஆளுநா் மாளிகை அதன் ‘எக்ஸ்’ பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறுபான்மையினா் மீது கிரண் ரிஜிஜு காட்டும் அக்கறை பாராட்டுக்குரியது மற்றும் ஊக்கமளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷாவுடன் இன்று சந்திப்பு: பிரதமருடனான சந்திப்பைத் தொடா்ந்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோரை புதன்கிழமை சந்திக்க ஆளுநா் ரவி திட்டமிட்டுள்ளாா்.

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆா்ம்ஸ்ட்ராங் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து விட்டதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தலைமையிலான பாஜக குழு, ஆளுநா் ஆா்.என். ரவியை சந்தித்து ஆா்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளது. இத்தகைய சூழலில் பிரதமா் மோடியைத் தொடா்ந்து உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஆளுநா் சந்திக்கவிருப்பது அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.