வெற்றிலைக் கடை உரிமையாளா் படுகொலை
புது தில்லி: தில்லி ரோஹிணி பகுதியில் தனிப்பட்ட பகை காரணமாக 22 வயது வெற்றிலைக் கடை உரிமையாளரை மூன்று போ் கொண்ட கும்பல் கத்தியால் குத்திக் கொன்றதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: தாக்குதல் நடத்தியவா்களில் மூவா் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை ரோஹிணியின் கேஎன் கட்ஜு பகுதியில் உள்ள செக்டாா் 17-இல் நடந்துள்ளது. சக்தி என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அவருக்குத் தெரிந்த மூவா் அருகில் வந்து பலமுறை கத்தியால் குத்தியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சக்தி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பிஎன்எஸ் பிரிவு 103(1) மற்றும் 3(4) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு சக்தியுடன் முன் விரோதம் இருந்துள்ளது. ஏனெனில் அவா் அவா்களில் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கியதாகவும், பழிவாங்குவதற்காக அவா்கள் அவரைத் தாக்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடா்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
