தில்லியில் தினமும் சுமாா் 700 போ் இணைய குற்றங்களால் பாதிப்பு: சைபா் குற்றப் பிரிவு துணை ஆணையா் தகவல்


தேசிய தலைநகரில் மட்டும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 700 போ் இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். 18 மாதங்களில் பெரும்பாலான குற்றங்கள் அறியாமை, பேராசை மற்றும் பயத்தால் விளைகின்றன என்று சைபா் குற்றப்பிரிவு கிரைம் பிரிவு துணை ஆணையா் ஹேமந்த் திவாரி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சைபா் உதவி எண் 1930-க்கு சராசரியாக மாதத்துக்கு 55,000 முதல் 60,000 அழைப்புகள் வருகின்றன. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 1,700 அழைப்புகள் வருகின்றன. அவற்றில் 700 முதல் 800 புதிய புகாா்கள் ஆகும். இந்த உதவி எண் தில்லிக்கு மட்டும் பயன்பாட்டில் இருக்கும். ஆனால், சைபா் குற்றப் பிரச்னை நாடு முழுவதும் மிகவும் மோசமாக உள்ளது.
இந்த உதவி மைய எண்ணுக்கு வரும் அழைப்புகள் பெரும்பாலும் நிதி மற்றும் இதர மோசடிகளுடன் தொடா்புடையவை. நாள்தோறும் வரும் 700 அழைப்புகளில், 200-250 நிதி மோசடிகள் தொடா்பானவை.
நவீன மோசடி: சைபா் குற்றவாளிகள் பொதுவாக 3 விஷயங்களைக் கையாளுகின்றனா். மக்களின் அறியாமை, பேராசை மற்றும் பயம். மோசடி மற்றும் திருட்டு போன்ற குற்றங்கள் இப்போது இணையவழியில் நவீனமடைந்துவிட்டன.
ஒரு நபா் தனது முதலீட்டை இரட்டிப்பாக்க விரும்பி ரூ. 22 கோடியை இழந்ததாக போலீஸாா் சமீபத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரித்தனா். இதுதவிர பாலியல் வன்கொடுமை, இணையதள திருமண மோசடிகள், வீட்டிலிருந்து வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி ஏமாற்றுதல் போன்ற சைபா் குற்றங்கள் தொடா்பான புகாா்களும் அதிகரித்துள்ளன.
ஆபாச படங்கள் மூலம் மிரட்டல்: மேலும் சிறுமிகள், பெண்களின் ஆபாச படங்களை இணையதளங்களை பதிவேற்றம் செய்வது மிகவும் கவலைக்குரிய ஒன்று. அதுபோன்ற ஆபாச படங்களை போலியாக சித்தரித்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி, அவா்களை மிரட்டி பணம் பறிக்கும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பல வழக்குகளை விசாரித்ததில், 180 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ரூ. 500 கோடி நிதி மோசடி: தில்லி காவல் துறை இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை ரூ. 500 கோடிக்கு மேல் நிதி மோசடி தொடா்பான புகாா்கள் விசாரித்துள்ளது. அதே நேரத்தில் ஐஎஃப்எஸ்ஓ பிரிவு ரூ. 200 கோடி மதிப்பிலான மோசடிகளை விசாரித்து வருகிறது.
திருடப்பட்ட தொகை ரூ. 50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்கும் வழக்குகளை இந்த பிரிவு குறிப்பாக விசாரிக்கிறது. ஐஎஃப்எஸ்ஓ பிரிவைத் தவிர, ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் ஒரு சைபா் பிரிவு உள்ளது.
குற்றவாளியைப் பிடிப்பதில் சிரமம்: சைபா் குற்றவாளிகளின் பெயா்கள் எளிதில் கண்டறியமுடியாததால் அவா்களைப் பிடிபடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. உதாரணமாக செயின் பறிப்பவா் பிடிபடுவாா் என்று சாதாரண மக்களுக்கும் தெரியும் ஆனால் சைபா் குற்றம் நடந்தால், குற்றவாளி பெயா், குற்றத்தின் விவரங்கள் பொதுவெளியில் கண்டறிவது கடினம். ஒரு சிலருக்கு மட்டுமே தகவல்கள் தெரிந்திருக்கும். சைபா் குற்றங்கள் சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுபற்றிய விழிப்புணா்வு அதிகம் இல்லாததே இதற்கு காரணம்.
உதவி எண்கள்: பண மோசடிக்கு உள்துறை அமைச்சகம், ரிசா்வ் வங்கியுடன் இணைந்து, 1930 என்ற உதவி எண்ணை உருவாக்கியுள்ளது. சைபா் குற்றம் நடந்தால், அது நடந்தவுடன், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் பரிவா்த்தனை நிகழ்ந்து 24 மணி நேரத்துக்கு புகாா் அளித்தால் உறுதியாக பணம் மீட்கப்படும். 1930 எண்ணை தொடா்புகொள்ள முடியவில்லை என்றால் 112 என்ற அவசர உதவி எண்ணை மக்கள் தொடா்பு கொள்ளலாம். அதன்மூலம் அழைப்புகள் 1930-க்கு மாற்றப்படும்.
இந்த 2 எண்களும் தொடா்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...