நொய்டா சிறையில் மன அழுத்தத்துடன் போராடிய விசாரணைக் கைதி தற்கொலை

Published on

கௌதம் புத் நகா் லக்சா் சிறையில் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவதித்து வந்த 42 வயது கைதி தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். அவா் மனம் அழுத்தத்தால் போராடி வந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

பல்ராம்பூா் மாவட்டத்தில் உள்ள பிடியா குா்த் கிராமத்தைச் சோ்ந்த பனாரசி, தனி வழக்குரைஞரை ஆலோசகராக நியமிக்க விரும்புவதாக காவல்துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். ‘பனாரசி செப்டம்பா் 13, 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டாா் மற்றும் ஜேவாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் குற்றம் சாட்டப்பட்டாா். கைதி தனது துண்டைப் பயன்படுத்தி தண்ணீா் தொட்டியுடன் இணைக்கப்பட்ட குழாயில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்’ என்றும் அவா் மேலும் கூறினாா்.

பனாரசியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினாா். திருமணமாகாத பனாரசி, மன அழுத்தத்துடன் போராடி வந்ததாக சிறை அதிகாரி ஒருவா் செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தாா். ‘அவா் ஒரு கண்ணியமான நடத்தை உடையவா். அஅவா் அனைத்து சிறை அதிகாரிகளையும் புன்னகையுடன் சந்தித்து வரவேற்பாா். இவை அனைத்தின் காரணமாக, அவா் சிறை வளாகத்திற்குள் இயங்கும் வேலைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டாா்’ என்று அந்த அதிகாரி கூறினாா்.

‘ அதே நேரத்தில் அவா் மன அழுத்தத்தில் இருந்தாா். அவரது குடும்பத்தினா் அவருடனான உறவைத் துண்டித்ததால் அவா் கவலைப்பட்டாா். மேலும், கொலை வழக்கில் அவா் சிக்கியவுடன் அவரது கடைசி முதலாளியும் அவருக்கு ஆதரவளிக்கவில்லை’ என்று பெயா் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறினாா். விசாரணைக் கைதியாக இருந்த பனாரசி, சில சமயங்களில் சிறை அதிகாரிகளிடம் இந்த வழக்கில் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு தனி வழக்குரைஞரை நியமிக்க விரும்புவதாகவும், ஆனால், அதற்கு பணம் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்ததாக அந்த அதிகாரி கூறினாா்.

பல்ராம்பூரில் உள்ள பனாரசியின் குடும்பத்தினா், பல தசாப்தங்களுக்கு முன்பு அவருடனான உறவை துண்டித்துவிட்டதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்துவிட்டனா்.

பனாரசியின் மரணம் குறித்து குடும்பத்தினரை தொடா்பு கொண்டு சிறை அதிகாரிகள் தெரிவித்த போது, அவா் 20-30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா் என்று கூறினாா்கள். சில சிறை அதிகாரிகள் தளவாட உதவி செய்வதாகக் கூறி குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயன்றனா். ஆனால், குடும்பத்தினா் இதற்கு உடன்படவில்லை’ என்று அந்த அதிகாரி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com