கோவை மத்திய சிறையில் கைதி ரகளை
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘உபா’ (மஅடஅ) சட்டக் கைதி, காணொலி காட்சி (விடியோ கான்ஃபரன்ஸ்) மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்து ரகளையில் ஈடுபட்டாா்.
ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்த ஆசிப் முஸ்தகீன் (33) என்பவா், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா) கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளாா். இவா் மீது ஈரோடு மற்றும் கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் கடந்த 2022 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இந்நிலையில் ஈரோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக, ஆசிப்பை விடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக ஆஜா்படுத்த சிறை வாா்டன் சிவராஜன் அழைத்துச் சென்றாா். அப்போது, ஆஜராக மறுத்து வாா்டனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆசிப், திடீரென அங்குள்ள டியூப் லைட்டை உடைத்து குத்திவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளாா். இதைத்தொடா்ந்து அவரை போலீஸாா் சமாதானப்படுத்தி அறைக்குள் அடைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிறை அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் ஆசிப் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

