/

அரவிந்த் கேஜரிவாலைச் சுற்றி சட்டத்தின் கயிறு இறுகுகிறது: வீரேந்தா் சச்தேவா

அரவிந்த் கேஜரிவாலைச் சுற்றி சட்டத்தின் கயிறு இறுகுகிறது: வீரேந்தா் சச்தேவா

News image

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

Updated On :19 மார்ச் 2024, 6:30 pm

புது தில்லி: முதல்வா் அரவிந்த் கேஜரிவாலைச் சுற்றி சட்டத்தின் கயிறு இறுகி வருவதால் ஆம் ஆத்மி தலைவா்கள் விரக்தியடைந்துள்ளனா். அதனால்தான், ஒவ்வொரு உயா்மட்ட முக்கிய வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து புலனாய்வு அமைப்புகள் பத்திரிக்கை அறிக்கைகளை வெளியிடுவதை அவா்கள் மறந்துவிடுகின்றனா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா்.

அமலாக்கத் துறையின் அழைப்பாணை உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து தில்லி ஆம் ஆத்மி அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை விமா்சித்திருந்தாா். இந்த நிலையில், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது: அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற புலனாய்வு விசாரணை அமைப்புகள், மதுபான ஊழல்கள் மற்றும் பிற முக்கிய வழக்குகள் தொடா்பான வழக்குகளை தொடா்ந்து விசாரித்து வருகின்றன.

மேலும், வழக்குகளின் சட்ட முன்னேற்றம் குறித்து கருத்தும் தெரிவித்து வருகின்றன. திங்கள்கிழமை, மதுபான ஊழல் விசாரணையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டபோது, புலனாய்வு அமைப்பு கலால் முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கே.கவிதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. அது, இந்த வழக்கில் குறிப்பிடத்தக்க கைதுகள் இருக்கலாம் என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆனால் தனிப்பட்ட யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

முதல்வா் கேஜரிவால் கைது செய்யப்படலாம் என்று ஒட்டுமொத்த ஆம் ஆத்மி கட்சியும் திங்கள்கிழமை ஒரு அநாமதேய அறிக்கையின் அடிப்படையில் அரசியலை உருவாக்கி வரும் விதம், கேஜரிவால் ஊழல்வாதி என்பதும், அவா் சிறையில் அடைக்கப்படுவதும் உறுதியாகி வருகிறது என்றாா் அவா்.