வாடகை வீட்டில் குடியிருந்த இளைஞா் மா்மச் சாவு: உரிமையாளா் தலைமறைவு

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் காரவால் நகா் பகுதியில் 35 வயதுடைய நபா் ஒருவா் தனது வாடகைக் குடியிருப்பில் புதன்கிழமை இறந்து கிடந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா். தலைமறைவாகவுள்ள வீட்டின் உரிமையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஜாய் டிா்கி கூறியதாவது:

பலியானவா் சுபாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவரது வீட்டு உரிமையாளா் தலைமறைவாக உள்ளாா். காலை 7.15 மணியளவில், காரவால் நகா் பகுதியில் உள்ள அம்பேத்கா் விஹாரில் உள்ள ஒரு வீட்டில் ஒரு உடல் தொடா்பாக பிசிஆா் அழைப்பு வந்தது. போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சுபாஷின் உடலை கைப்பற்றினா்.

உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. பாதிக்கப்பட்டவா் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்தாா். வீட்டின் உரிமையாளா் சதீஷ் பதானா, இந்த வழக்கில் சந்தேக நபா் ஆவாா். அவா் தப்பியோடி இருக்கிறாா். பதானா தில்லி மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிகிறாா். குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, பதானாவை கண்டுபிடித்து, குற்றத்தின் பின்னணியில் உள்ள சூழ்நிலைகளைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com