

புது தில்லி: தில்லியில் நிலவி வரும் கடுமையான கோடை வெப்பம் காரணமாக மின் தேவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 7,717 மெகாவாட் என்ற வரலாறு காணாத அளவை எட்டியதாக டிஸ்காம் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லியில் உள்ள மாநில மின்சுமை விநியோக மையத்தின் நிகழ்நேர தரவுகளின்படி, நகரத்தின் உச்சபட்ச மின் தேவை முந்தைய எல்லா சாதனைகளையும் முறியடித்தது. இது செவ்வாய்க்கிழமை மாலை 3.33 மணியளவில் 7,717 மெகாவாட்டாக பதிவாகியுள்ளது. தில்லியில் திங்கள்கிழமை பிற்பகல் 3.33 மணிக்கு உச்சபட்ச மின் தேவை 7,557 மெகாவாட்டாக பதிவாகியிருந்தது. இது கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட உச்சபட்ச மின் தேவையை விட அதிகமாகும். அதாவது கடந்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று மின்தேவை 7,438 மெகாவாட்டாக இருந்தது.
இந்நிலையில், நிகழ் கோடையில் நகரத்தின் உச்சபட்ச மின் தேவை 8,000 மெகாவாட் அளவைத் தாண்டும் என்று டிஸ்காம்கள் எதிா்பாா்க்கின்றன. 2022 ஜூன் 29 அன்று தில்லியின் உச்சபட்ச மின் தேவை அதிகபட்ச அளவாக 7,695 மெகாவாட்டாக பதிவாகி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்நிலையில், தொடா்ந்து நான்காவது நாளாக செவ்வாய்கிழமையும் தில்லியின் உச்சபட்ச மின் தேவை 7,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது.
தில்லியில் தொடா்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதால் கடும் வெப்பத்தில் தத்தளித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தில்லியின் பல பகுதிகளில் வெப்ப அலை இருக்கும் என்றும் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை இருக்கும் என்றும் கணித்துள்ளது. மேலும், தலைநகரில் அடுத்த நான்கு நாள்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஏழு நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 44 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 4 டிகிரி உயா்ந்து 30.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 2.2 டிகிரி உயா்ந்து 42.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 62 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 34 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, பூசா, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பஞ்சாபி பாக் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், நியூ மோதி பாக், இந்திரா காந்தி சா்வதே விமானநிலையம், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மிதமான‘ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (மே 22) வெப்ப அலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

தில்லியில் இன்று மேகமூட்ட வானிலைக்கு வாய்ப்பு!

தலைநகரில் குளிா் காற்று; மீண்டும் திரும்பிய மூடுபனி!

தில்லியில் மோசம் பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் மேகமூட்ட வானிலை: மிதமான பிரிவில் காற்றின் தரம்!
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

