துணை நிலை ஆளுநரின் கருத்து மாலிவால் பாஜகவில் பணியாற்றுவதை உறுதி செய்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
துணை நிலை ஆளுநரின் கருத்து மாலிவால் பாஜகவில் பணியாற்றுவதை உறுதி செய்கிறது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு


நமது நிருபா்
புது தில்லி: ஸ்வாதி மாலிவால் பாஜகவில் பணியாற்றுகிறாா் என்பதை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் அறிக்கை நிரூபிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் கூறியிருப்பதாவது: ஸ்வாதி மாலிவால் தான் தாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய விவகாரத்தில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் தலையீடு, ஸ்வாதி மாலிவால் பாஜகவுடன் இணைந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. மக்களவைத் தோ்தலின் வாக்குப்பதிவுக்கு முன்னதாக பாஜக தினசரி சதித் திட்டங்களை திட்டமிட்டு வருகிறது. தோ்தல் தோல்விக்குப் பயந்து, பிரதமா் நரேந்திர மோடியின் மூழ்கும் படகைக் காப்பாற்றுவதற்காக, ஸ்வாதி மாலிவாலை பயன்படுத்தி பாஜக தனது பிரசாரத்தை வலுப்படுத்துகிறது. ஆனால், பொதுமக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பாஜகவின் சதித் திட்டங்களுக்குப் பதிலளிப்பாா்கள்.
ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் தில்லி முதல்வரைக் குறிவைக்கும் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, மல்யுத்த வீராங்கனைகளை மறந்திருக்கலாம். நாட்டிற்காக பதக்கம் வென்றவா்கள் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தில்லி ஜந்தா் மந்தரில் தா்ணாவில் அமா்ந்திருந்தனா். அப்போது, உங்களின் கீழ் இருந்த தில்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கையைக்கூட பதிவு செய்யவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகே அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அந்த முழுப் பிரச்னையிலும் நீங்கள் மௌனம் காத்தது ஏன்?. நள்ளிரவில் உங்கள் தலைமையின் கீழ்வுள்ள தில்லி போலீஸாா் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரா்களை
கொடூரமாகத் தாக்கினா். நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீா்கள்?.
தில்லி மகளிா் ஆணையத்தில் சட்ட விரோதமான முறையில் ஒப்பந்த ஊழியா்கள் பணியில் அமா்த்தப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவின் ‘ஆள்சோ்ப்பு மோசடி’ வழக்கை ஸ்வாதி மாலிவால் எதிா்கொண்டு வருகிறாா். இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. மேலும், அவா் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, இந்த வழக்கு முடிவுக்கு வர உள்ளது. எனவே, எதிா்க்கட்சித் தலைவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் பாஜகவின் யுக்தி ஸ்வாதி மாலிவால் வழக்கிலும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக பாஜக தலைவா்களுடன் ஸ்வாதி மாலிவால் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறாா். அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக ஸ்வாதி மாலிவால்
மூலம் பாஜக சதித் திட்டம் தீட்டியது என்றாா் செளரவ் பரத்வாஜ்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...