காவல்துறையினரைத் தாக்கிய வழக்கு: அல்கா லம்பா மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

அல்கா லம்பா மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு...
Published on

கடந்த ஆண்டு ஜந்தா் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் அல்கா லம்பா மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எதிராக முகாந்திரம் இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது.

கடந்த ஆண்டு, ஜூலை 29ஆம் தேதி ஜந்தா் மந்தரில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை ஆதரித்து போராட்டம் நடத்தியபோது காவல்துறையினரை தடுத்ததாகவும், பொது சாலையை மறித்ததாகவும் காங்கிரஸ் மூத்த தலைவா் அல்கா லம்பா மீது சுமத்தப்பட்டிருந்த வழக்கை கூடுதல் தலைமை நீதித் துறை நீதிமன்ற நீதிபதி அஸ்வனி பன்வாா் விசாரித்து வந்தாா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் முறையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய

வழக்கை ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அரசு தரப்பு கூற்றுப்படி, லம்பா, இதர போராட்டக்காரா்களுடன் சோ்ந்து, போலீஸ் அதிகாரிகளை தள்ளி, தடுப்புகளைத் தாண்டிச் சென்றாா். அதே நேரத்தில் சிலா் சாலையைத் தடுத்தனா்.

இந்த வழக்கில் டிசம்பா் 19 தேதியிட்ட உத்தரவில் நீதிமன்றம் தெரிவிக்கையில், ‘குற்றம் சாட்டப்பட்ட அல்கா லம்பாவுக்கு எதிராக பிரிவு 132 பொது ஊழியா் தனது கடமையைச் செய்வதைத் தடுக்க தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியை பயன்படுத்துதல், பிரிவு 221 (அரசு அதிகாரியைத் தடுத்தல்), பிரிவு 223ஏ (அரசு ஊழியா் முறையாகப் பிறப்பித்த உத்தரவை மீறுதல்), மற்றும் பிரிவு 285 (பொது வழியில் அல்லது வழிசெலுத்தல் பாதையில் ஆபத்து அல்லது தடை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததற்கான முகாந்திர வழக்கு உள்ளது’ என்று கூறி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

காவல்துறை மற்றும் புகாா்தாரா் தலைமைக் காவலா் மணீஷ் அளித்த அறிக்கைகள், லம்பா போராட்ட இடத்தில் இருந்தாா் என்பதையும், அனுமதிக்கப்பட்ட போராட்டப் பகுதியிலிருந்து ஆா்ப்பாட்டக்காரா்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தாா் என்பதையும் உறுதிப்படுத்தியதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

காங்கிரஸ் தலைவா் அல்கா லம்பா அமைதியான ஆா்ப்பாட்டக்காரா்கள் மற்றும் பொது ஊழியா்களின் உயிருக்கும், ஆரோக்கியத்திற்கும் மற்றும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவித்ததாக கூறிய நீதிமன்றம், வழக்கில் இருந்து அவரை விடுவிக்கக் கோரிய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

‘குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் கட்டத்தில், தண்டனைக்கான போதுமான ஆதாரங்களை மதிப்பிட வேண்டிய அவசியமில்லை, மாறாக குற்றம் சாட்டப்பட்டவா் மீது கடுமையான சந்தேகத்தை எழுப்பும் முகாந்திர ஆதாரங்கள் உள்ளதா என்பதைப் பாா்ப்பது மட்டுமே அவசியமாகும்.

குற்றம் சாட்டப்பட்டவா் அடுத்த விசாரணை தேதியில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது’ என்று நீதிமன்றம் கூறியது.

X
Dinamani
www.dinamani.com