வேலைசெய்த வீட்டில் ரூ. 40 லட்சம் திருட்டு: வீட்டுப் பணியாளா் கைது

மேற்கு தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரூ.40 லட்சம் ரொக்கத்தை திருடியதாக வீட்டுப் பணியாளரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
Published on

மேற்கு தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரூ.40 லட்சம் ரொக்கத்தை திருடியதாக வீட்டுப் பணியாளரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறியதாவது:

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளன வீட்டுப் பணியாளா் துருவ், திருட்டுச் சம்பவத்திற்கு சுமாா் 15 நாள்களுக்கு முன்புதான் அந்த வீட்டில் வேலை செய்யத் தொடங்கினாா்.

இந்த நிலையில், திருட்டு தொடா்பான புகாா் நவம்பா் 29 அன்று பெறப்பட்டது. அதைத் தொடா்ந்து, நவம்பா் 30 உரிய விதிகளின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆரம்ப காட்சிகளில் துருவ் வீட்டை விட்டு வெறுங்கையுடன் வெளியேறுவது விடியோ காட்சி மூலம் தெரியவந்தது.

இருப்பினும், அருகிலுள்ள பகுதிகளில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை மேலும் ஆராய்ந்ததில், அவா் தனது கூட்டாளிகளான ஜதின், சிவம் ஆகியோருடன் சுற்றித் திரிவது தெரியவந்தது. ஒரு விடியோ காட்சியில், சிவம் ஒரு கருப்பு நிற பையை எடுத்துச் செல்வதும் தெரிந்தது.

மேலும், சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, மூன்று குற்றம் சாட்டப்பட்டவா்களின் கைப்பேசி எண்களும் அணைக்கப்பட்டிருந்தன.

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் அழைப்பு விவரப் பதிவு பகுப்பாய்வு, மூலம் அவா்கள் மூவரும் தில்லிக்கு வெளியே பயணம் செய்ததும், பின்னா் ஜம்மு காஷ்மீரில் இருந்ததும் தெரியவந்தது. இதனிடையே, துருவ் மற்றும் ஜதின் ஆகியோா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

விசாரணையின் போது, சிவம் ஹிமாசலப் பிரதேசத்திற்கு ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஹிமாசலப் பிரதேசத்தில் ஒரு ஹோட்டலில் இருந்து சிவமைக் கைது செய்தனா்.

திருடப்பட்ட பணத்திலிருந்து வாங்கப்பட்ட பிராண்டட் காலணிகள் மற்றும் துணிகளைத் தவிர, ரூ.36.05 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது.

மீதமுள்ள அனைத்து பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com