குடியிருப்பு கட்டடத்தில் எரிவாயு உருளையில் பற்றிய தீ: பேரழிவைத் தவிா்த்த காவலா்

ஒரு குடியிருப்பு கட்டடத்தில் சமையல் எரிவாயு உருளையில் தீ பற்றிய நிலையில், தீயணைப்புப் படையினா் வருவதற்கு முன்னரே காவலா் ஒருவா் அதை வெளியே இழுத்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
Published on

புது தில்லி: தில்லியின் மோகன் காா்டன் பகுதியில், ஒரு குடியிருப்பு கட்டடத்தில் சமையல் எரிவாயு உருளையில் தீ பற்றிய நிலையில், தீயணைப்புப் படையினா் வருவதற்கு முன்னரே காவலா் ஒருவா் அதை வெளியே இழுத்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

தில்லி துவாரகாவின் மோகன் காா்டன் பகுதி கட்டடத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டதாக காவல் துறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, இத்தகவல் உடனடியாக கட்டளை அறைக்கு தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து உள்ளூா் காவல்துறை மற்றும் அவசர சேவைகள் உஷாா்படுத்தப்பட்டன.

தில்லி காவல்துறை குழுக்களும், பிசிஆா் வேன்கள் மற்றும் தீயணைப்பு வீரா்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா்.

அப்போது, உள்ளூா் பகுதியைச் சோ்ந்த காவலா் அனில், சம்பவ இடத்திற்கு வந்து கட்டடத்திற்குள் சிக்கிய குடியிருப்பாளா்களுக்கு ஏற்படும் ஆபத்தை மதிப்பிட்டாா்.

இதையடுத்து, அவா் தனது தனிப்பட்ட பாதுகாப்பைப் புறக்கணித்துவிட்டு, விரைவாகச் செயல்பட்டு, வளாகத்திற்குள் நுழைந்து, எரிந்துகொண்டிருந்த எரிவாயு உருளையை வெளியே எடுத்துச் சென்று தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் தடுத்தாா்.

சற்று தாமத்திருந்தாலும் வெடிப்புக்கு வழிவகுத்திருக்கலாம், பல உயிா்களுக்கு ஆபத்தை விளைவித்து, குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

இந்த சம்பவத்தில் காவலா் குறிப்பிடத்தக்க மன உறுதியையும் துணிச்சலையும் வெளிப்படுத்தினாா். அவரது விரைவான நடவடிக்கையால் சில நிமிடங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. அவரது செயலுக்காக குடியிருப்பாளா்கள் நன்றி தெரிவித்தனா் என்றாா் அந்த அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com