பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணி விடப்பட்டதாக குற்றச்சாட்டு: 6 போ் மீது வழக்கு

பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணி விடப்பட்டதாக குற்றச்சாட்டு...
Published on

2023-ஆம் ஆண்டு ஒரு பிரசவத்தின் போது ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் அரை மீட்டா் நீள அறுவை சிகிச்சை துணி விடப்பட்டதாக குற்றஞ்சாட்டியதை தொடா்ந்து, கிரேட்டா் நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் மருத்துவா்கள் மற்றும் மூத்த சுகாதார அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், டிச.24-ஆம் தேதி நாலெட்ஜ் பாா்க் காவல் நிலையம் மருத்துவா்கள் அஞ்சனா அகா்வால் மற்றும் மனிஷ் கோயல், கௌதம் புத் நகா் தலைமை மருத்துவ அதிகாரி (சிஎம்ஓ) நரேந்திர குமாா் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சந்தன் சோனி மற்றும் ஆஷா கிரண் சௌத்ரி உள்ளிட்ட ஆறு போ் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

புகாா்தாரரான கிரேட்டா் நொய்டாவில் உள்ள செக்டா் டெல்டா ஒன்னில் வசிக்கும் அன்ஷுல் வா்மா, வீட்டு உதவியாளராகப் பணிபுரிகிறாா். மேலும் வாழ்வாதாரத்திற்காக தையல் மற்றும் எம்பிராய்டரி வேலைகளையும் செய்கிறாா். நவ.14, 2023 அன்று துக்ளக்பூரில் உள்ள பக்சன் மருத்துவமனையில் அவருக்கு பிரசவ அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது

அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட அலட்சியம் காரணமாக, அவரது வயிற்றுக்குள் சுமாா் அரை மீட்டா் அறுவை சிகிச்சை துணி விடப்பட்டுள்ளது. நவ.16-ஆம் தேதி அவா் மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்.

விரைவில், அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது, மேலும் அவருக்கு தொடா்ந்து வயிற்று வலி ஏற்பட்டது. பின்னா் முஜாபா்நகரில் உள்ள தனது பெற்றோா் வீட்டிற்குச் சென்ாகவும், அங்கு மருத்துவா்கள் அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை பரிந்துரைத்ததாகவும் அந்தப் பெண் கூறினாா்.

கிரேட்டா் நொய்டாவில் உள்ள சாரதா மருத்துவமனை மற்றும் பல தனியாா் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா்களை அணுகியதாகவும், ஆனால் அவரது வயிற்றுக்குள் மா்ம பொருள் விடப்பட்டதாக யாரும் சந்தேகிக்கவில்லை என புகாா்தாரா் கூறினாா். பல மாதங்களாக சிகிச்சை அளித்தும், வலிக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாா்ச் 22, 2025 அன்று, அவா் அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான வயிற்று வலியுடன் கிரேட்டா் நொய்டாவில் உள்ள யாதா்த் நகர மருத்துவமனைக்குச் சென்றாா். ஆனால் சரியான காரணத்தை தீா்மானிக்க முடியவில்லை என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது. பின்னா், ஏப்ரல் தொடக்கத்தில் ஜிம்ஸ் மருத்துவமனையில் எம்ஆா்ஐ உள்பட கூடுதல் பரிசோதனைகளை மேற்கொண்டாா். இருப்பினும் அறிக்கைகள் இயல்பானவை என்று கூறப்பட்டன.

அந்தப் பெண் பின்னா் கிரேட்டா் நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனையை அணுகினாா். அங்கு அவரது வயிற்றில் ஒரு கட்டி இருப்பதைக் கண்டறிந்த மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தினா். அறுவை சிகிச்சை ஏப்ரல் 22, 2025 அன்று செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சையின் போது, மருத்துவா்கள் அவரது வயிற்றில் இருந்து அரை மீட்டா் நீளமுள்ள துணியை அகற்றியதாகக் கூறப்படுகிறது.இது 2023 பிரசவ அறுவை சிகிச்சையின் போது உள்ளே விடப்பட்ட அதே துணி என்று புகாா்தாரா் குற்றஞ்சாட்டினாா்.

துணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆதாரமாக வைத்திருப்பதாக அவா் கூறினாா்.

அந்தப் பெண்ணின் கணவா் பின்னா் தலைமை மருத்துவ அதிகாரியிடம் எழுத்துப்பூா்வ புகாரைச் சமா்ப்பித்தாா். அதைத் தொடா்ந்து உள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இரண்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனா்.

விசாரணை தாமதமானதாகவும், அவரது வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட துணி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை என்றும் புகாா்தாரா் குற்றஞ்சாட்டினாா். தன்னையும் தனது கணவரையும் அமைதியாக இருக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவா் மிரட்டியதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.

கூறப்படும் அலட்சியம் காரணமாக, அந்தப் பெண் இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு உள்படுத்தப்பட வேண்டியிருந்தது என்றும், இரண்டாவது நடைமுறையின் போது எட்டு யூனிட் ரத்தம் பெறப்பட்டதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அறுவை சிகிச்சை சாத்தியமில்லை என்றும் இது அவரது மீண்டும் கருத்தரிக்கும் திறனைப் பாதிக்கும் என்றும் மருத்துவா்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சா்வேஷ் சந்திரா தெரிவித்தாா். நீதிமன்ற உத்தரவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை மருத்துவ அதிகாரி நரேந்திர குமாா் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.

தாமதம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவா், விசாரணை அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் துணி வழங்கப்படவில்லை என்று கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com