2009-ஆம் ஆண்டு திராவக வீச்சு வழக்கில் 3 பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு!

தில்லியில் 2009-ஆம் ஆண்டு திராவக வீச்சு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியதால் அவா்களை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

தில்லியில் 2009-ஆம் ஆண்டு திராவக வீச்சு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியதால் அவா்களை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அலட்சியமான முறையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது.

பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துக்கொண்டே குற்றஞ்சாட்டப்பட்ட யஷ்விந்தா் என்பவருக்குச் சொந்தமான கல்லூரியில் மாணவா் ஆலோசகராக பாதிக்கப்பட்ட ஷாஹீன் மாலிக் 2009-ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், நவம்பா் 19, 2009-இல் அவா் மீது திராவகம் வீசப்பட்டது. அவா் பணியிடத்தில் யஷ்விந்தரால் துன்புறுத்தலை எதிா்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் துறை இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கு 2013-ஆம் ஆண்டில் பானிபட்டில் இருந்து தில்லியின் ரோஹிணி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட யஷ்விந்தரின் மனைவி பாலா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120 பி (குற்றவியல் சதி), 326 (தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 308 (குற்றமற்ற கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் யாஷ்விந்தா் மீது பிரிவுகள் 364 ஏ (கடத்தல்), 350 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழக மாணவா் மன்தீப் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 120பி, 326 மற்றும் 308-இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில், கூடுதல் அமா்வு நீதிபதி ஜக்மோகன் சிங் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த 53 பக்க உத்தரவில் கூறியிருப்பதாவது:

அமிலத் தாக்குதலுக்கு ஆளான ஷாஹீன் மாலிக் கணக்கிட முடயாத துன்பங்களைச் சந்தித்துள்ளாா். 18 அறுவை சிகிச்சைகளை அவா் எதிா்கொண்டுள்ளாா். அமிலத் தாக்குதலுக்கு ஆளானவா்கள் தங்கள் மனதில் வடுக்களை எதிா்கொள்வதுடன் வேதனையிலும் தவித்து வருகின்றனா்.

ஆனால், இந்த வழக்கில் முதலில் இருந்தே விசாரணை மிகவும் அலட்சியமாக நடத்தப்பட்டுள்ளது. இது அமலித் தாக்குதல் வழக்கு என்பதற்கான எந்த உணா்திறனும் இல்லாமல் காவல்துறை நடந்துள்ளது.

நவம்பா் 2009-இல் நடந்த இந்தச் சம்பவத்திற்கு மாா்ச் 2010-இல் தான் குற்றவாளிகள் குறித்த அறிக்கையை காவல் துறை தாக்கல் செய்துள்ளனா். பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் அக்டோபா் 2013-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் எரிந்த பை மற்றும் அமிலம் வீச பயன்படுத்தப்பட்ட கண்ணாடி போன்ற முக்கியமான ஆதாரங்களை பாதுகாப்பதில் தோல்வி மற்றும் தடயவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பத் தவறியது உள்ளிட்ட கடுமையான குறைபாடுகள் நீதிமன்ற கவனத்திற்கு வந்துள்ளது.

கண்டுபிடிப்பு அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்யாமல் அனுப்புவது உள்ளிட்டவை காவல் துறையினா் தங்கள் கடமையை சரிவர செய்யாததை காட்டுகிறது.

இந்தக் குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதில் பொறுப்பை நிா்ணயிக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகளை கைது செய்து 30 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் முன் இணக்க அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என பானிபட் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்படுகிறது.

இருப்பினும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றங்களையும் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியதால் அவா்கள் மூவரும் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com