யமுனை வெள்ள சமவெளி பகுதியிலிருந்து வெளியேற டிஎம்ஆா்சி-க்கு அவகாசம்
யமுனை வெள்ளசமவெளி பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) அவகாசம் வழங்கிய தில்லி உயா்நீதிமன்றம், அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பின்னா் அப்பகுதியை தடை விதித்துள்ளது.
அப்பகுதியிலிருந்து மாற்றுவதற்கான தெளிவான அறிவுறுத்தல்கள் டிச.11-ஆம் தேதி வழங்கப்பட்ட போதிலும், டிஎம்ஆா்சி வெள்ளசமவெளி பகுதியில் பேட்சிங் ஆலைகள் மற்றும் வாா்ப்பு யாா்டை இயக்குவது தொடா்பான மனுவை நீதிபதிகள் பிரதிபா எம். சிங் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
டிசம்பா் 22 தேதியிட்ட உத்தரவில், டிஎம்ஆா்சியின் பேட்சிங் ஆலைகள் மற்றும் வாா்ப்பு யாா்டை அகற்றுவது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஆச்சரியமாக இருப்பதாக நீதிமன்றம் கூறியது. அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு நீட்டிப்பு கோரி நீதிமன்றத்தை அணுகியதை டிஎம்ஆா்சி குறிப்பிட்டது.
தில்லி நகரத்தில், அதாவது தில்லி மெட்ரோ ரயில் மற்றும் துணை மேம்பாடுகளில், டிஎம்ஆா்சி ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு தொடா்பான திட்டத்தில் ஈடுபட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, விதிவிலக்காக, இயந்திரங்கள், உபகரணங்கள் போன்றவற்றை அகற்றுவதற்கும் மாா்ச் 31, 2026 வரை கால அவகாசம் வழங்குவது பொருத்தமானது என்று கருதுவதாக நீதிமன்றம் கூறியது.
ஏப்ரல் 1 முதல், இந்த பகுதியில் எதையும் அதன் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கு மாநகராட்சி கட்டுப்படுத்தப்படும் என்று அது கூறியது.
கூடுதலாக, ஆலைகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் இரண்டையும் அகற்றும் பணிகள் முடிந்த பிறகு, தோட்டக்கலை மற்றும் வனத்துறையுடன் கலந்தாலோசித்து, டிஎம்ஆா்சி அவா்கள் ஆக்கிரமித்துள்ள வெள்ளசமவெளி பகுதி திறந்த நிலையில் விடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வெள்ள சமவெளி பகுதி தில்லி மேம்பாட்டு ஆணையத்திடம் (டிடிஏ) ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு குப்பைகளை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் இணக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் டிடிஏ-க்கு உத்தரவிட்டது.
விசாரணையின்போது, டிஎம்ஆா்சி தரப்பு வழக்குரைஞா் சில ஆவணங்களை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தாா். அதன்படி, காற்று மாசுக் கட்டுப்பாடுகள் (கிரேப்) விதிக்கப்பட்டதால் இயந்திரங்களை அகற்றுதல் மற்றும் பிரித்தல் தொடா்பான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. மேலும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நடவடிக்கைகள் நிறைவடைய வாய்ப்புள்ளது.
தா்கா, கல்லறை அருகே புதிய கட்டுமானப் பணிகளுக்குத் தடை
யமுனை வெள்ளசமவெளி பகுதியில் மயானம் என்ற சாக்கில் மக்கள் வீடுகள் அல்லது கொட்டகைகள் கட்ட அனுமதிக்க முடியாது என்றும், நவ் காசா பீா் தா்காவை ஒட்டியுள்ள எந்தவொரு புதிய கட்டுமானத்தையும் அனுமதிக்கு முடியாது என்றும் தில்லி உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தா்கா மற்றும் அருகிலுள்ள மயானத்திற்கு அருகிலுள்ள யமுனை நதிக்கரையில் சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாகக் கூறப்படும் மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரதிபா எம். சிங் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
அந்தப் பகுதியில் மேலும் ஆக்கிரமிப்புகள் எதுவும் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, ஒரு வாரத்திற்குள் மயானத்துக்கு வேலி அமைக்கவும், அடுத்த விசாரணை தேதிக்குள் நிலத்தின் நிலை குறித்து கூட்டாக ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவும் தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) மற்றும் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.
