டி.ஜி.பி. நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு எதிரான மனு மீது உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
யு.பி.எஸ்.சி. பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரை (டி.ஜி.பி.) நியமிக்க தவறிய தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி கிஷோா் கிருஷ்ணசாமி என்பவா் தொடா்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு புதிய டிஜிபியை நியமனம் செய்யாமல் பொறுப்பு டி.ஜி.பி.யை நியமித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹென்றி திபேன் என்பவா் ஏற்கனவே வழக்கு தொடுத்திருந்தாா். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் அமா்வு, காவல்துறை தலைமை இயக்குனரை விரைந்து நியமிக்க உத்தரவிட்டது. குறிப்பாக யு.பி.எஸ்.சி. பரிந்துரை கிடைத்தவுடன் உடனடியாக தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.-ஐ நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் டி.ஜி.பி. யின் பெயரை இறுதி செய்து யு.பி.எஸ்.சி. தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய நிலையில் புதிய டி.ஜி.பி. இன்னும் நியமனம் செய்யப்படாமல் உள்ளது.
இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயலாகும். எனவே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா்.
அந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு, இம்மனுவுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
