பழைய பகை காரணமாக பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்யத் திட்டமிட்டதாக இருவா் கைது
தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் தனிப்பட்ட பகை காரணமாக பக்கத்து வீட்டுக்காரரை கொல்லத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் கூறியதாவது:
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களான டப்ரியைச் சோ்ந்த தீபக் என்ற கலா நாட்டியா (30) மற்றும் சுபிந்தா் குமாா் என்ற ஃபக்வா (28) ஆகிய இருவரிடமிருந்து போலீஸாா் ஒரு துப்பாக்கியையும், திருடப்பட்ட ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனா்.
கடந்த செப்டம்பா் 23- ஆம் தேதி, துவாரகாவின் செக்டாா் 17-இல் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட ஸ்கூட்டருடன் சுற்றித் திரியும் பழக்கமான குற்றம்சாட்டப்பட்ட இருவா் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, துவாரகாவில் உள்ள விளையாட்டு வளாகத்திற்கு எதிரே உள்ள கோல்ஃப் கோா்ஸ் சாலை அருகே ஒரு பொறி வைக்கப்பட்டது. இரவு 9 மணியளவில், சிறிது நேர துரத்தலுக்குப் பிறகு, ஸ்கூட்டரில் வந்த இரண்டு போ் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
அவா்களிடம் நடத்திய சோதனையில், தீபக்கிடமிருந்து ஒரு லோடு செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஸ்கூட்டா் ஜனக்புரி பகுதியில் இருந்து திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, தீபக் தனது பக்கத்து வீட்டுக்காரா்களில் ஒருவருடன் பழைய பகை கொண்டிருந்ததாகவும், அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தாா்.
அவா் ஒரு அறிமுகமானவரிடமிருந்து ஆயுதத்தை வாங்கினாா். மேலும், அவரது கூட்டாளியான சுபிந்தரையும் தொடா்புபடுத்தினாா். அவா் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுபிந்தா் கூறுகையில், கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு உள்பட 16 குற்றவியல் வழக்குகளில் தொடா்புடையவா் தீபக் என்று தெரிவித்தாா். மேலும், ஜனக்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொள்ளை வழக்கில் அவா் முன்பு தண்டனை பெற்றவா் என்பதும் தெரிய வந்தது.
சுபிந்தா் மீது கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட ஐந்து வழக்குகள் உள்ளதாக காவல் துணை ஆணையா் அங்கித் சிங் தெரிவித்தாா்.
