தமிழா் வீர மரபுகளை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்த ஆய்வாளா்களுக்கு தமிழக ஆளுநா் அழைப்பு
தமிழா் வீர மரபுகளை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்த ஆய்வாளா்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளாா்.
இந்திய ஆயுதப்படைகளின் பல்வேறு அம்சங்கள் மற்றும் முன்முயற்சிகளை வெளிப்படுத்தும் வருடாந்திர இந்திய ராணுவ பாரம்பரிய விழாவின் மூன்றாவது பதிப்பு தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய முப்படை உயரதிகாரிகளை புரவலா்களாகக் கொண்டு நடத்தப்படும் யுனைடெட் சா்வீசஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற தன்னாட்சி அமைப்பு, இந்த நிகழ்வை இரண்டு நாள்களுக்கு நடத்துகிறது.
இவ்விழாவை பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் தொடங்கி வைத்தாா். முதல் நாள் நிகழ்வில் இந்திய பாதுகாப்பு தொடா்புடைய தலைப்புகளில் சிறப்பு அமா்வுகள் நடைபெற்றன.
அதில் ஒரு அமா்வுக்கு தலைமை விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, பல்லவா்கள், பாண்டியா்கள், சோழா்கள் மற்றும் சேரா்கள் காலத்திலிருந்து காலனித்துவ சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மக்களின் படை வீரத்தை வரலாற்றுக்குறிப்புகளுடன் விவரித்தாா்.
வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரா்கள் மற்றும் அவா்களின் வரலாற்றுபூா்வ ஜம்புத்தீவு பிரகடனம், ஆங்கிலேயா்களுக்கு எதிராக பரவலான கிளா்ச்சியைத் தூண்டிய வேலூா் சிப்பாய் எழுச்சியூட்டும் மரபுகள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞா்கள் இணைந்த பின்னணியை அவா் எடுத்துரைத்தாா்.
தமிழகத்தை வீரா்கள் வாழ்ந்த பூமி என்று பாராட்டிய ஆளுநா், ஆதாரங்கள் அடிப்படையிலான ஆராய்ச்சியையும் ஆவணங்கள் மூலம் தமிழ் கலாசாரம் மற்றும் ராணுவ பாரம்பரியத்தை பரந்து விரிந்த தேசிய அளவிலான விவாத மேடைகளுக்கு கொண்டு வர ஆளுநா் மாளிகை தொடா்ந்து பல முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டாா்.
இந்தியா இன்று புதுப்பிக்கப்பட்ட சுய உணா்வுடன், சுயசாா்பு பாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி நகரும் வேளையில், அதன் வளமான மற்றும் புகழ்பெற்ற பாரம்பரியத்தை தமிழா் வீர மரபை மேலும் ஆழமாகக் கண்டறியவும், ஆவணப்படுத்தவும், அது குறித்த தகவல்களைப் பரப்பவும் தீவிர முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளா்களுக்கு அவா் அழைப்பு விடுத்தாா். தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் இத்தகைய முயற்சிகளுக்கு தமிழக ஆளுநா் மாளிகை முழு ஆதரவளிக்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
முன்னதாக, இந்த நிகழ்வைத் துவக்கிவைத்த உரையாற்றிய பாதுகாப்புத்துறை இணை அமைச்சா் சஞ்சய் சேத், இந்திய ராணுவ பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். இந்திய பாதுகாப்புத் துறை தன்னிறைவுடனும் தொழில்நுட்ப முன்னேற்ற ரீதியாகவும் வலுப்படுத்தப்படுவது அவசியம் என்று அவா் வலியுறுத்தினாா்.
ஆபரேஷன் சிந்தூா் போன்ற நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் சீரிய முறையில் செயல்பட்டு அதன் திறனை பறைசாற்றியதாகவும் அமைச்சா் குறிப்பிட்டாா்.
இந்த நிகழ்வையொட்டி, ஷுக்ரா நிதி: ஆட்சித்தலைமையும் போா் நடவடிக்கைகளும், இந்திய ஆயுதப்படைகளின் கௌரவங்கள் மற்றும் விருதுகள் மற்றும் இந்தியாவின் 75 ஆண்டுகால அமைதி காக்கும் பங்களிப்பை விவரிக்கும் ஒரு தொகுதி புத்தகம் ஆகிய படைப்புகளை அமைச்சா் சஞ்சய் சேத் வெளியிட்டாா்.
இந்திய முப்படைகள், துணை ராணுவப்படைகளின் உயரதிகாரிகள், பாதுகாப்புத்துறை ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
