தில்லியில் ஏடிஎம் மோசடி: 3 போ் கைது, ரூ.42 லட்சம் மீட்பு
மேற்கு தில்லி மாவட்டத்தில் ஏடிஎம் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேரை தில்லி காவல்துறை கைது செய்தது.
அவா்களிடமிருந்து ரூ.42.57 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை மீட்டுள்ளதாக காவல் அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
நவம்பா் 12 ஆம் தேதி, சிசிடிவி காட்சிகளில் முன்னா் காணப்பட்ட ஒரு சந்தேக நபா், திலக் நகா் பகுதியில் உள்ள ஏடிஎம்-இல் மோசடி பணம் எடுக்க வருவதாக போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தது.
இதையடுத்து, ஸ்கூட்டியில் வந்து ஏடிஎம்-இல் இருந்து பணம் எடுத்தபோது விஷ்ணு காா்டனை சோ்ந்த சிம்ரன் சந்து (48) என்ற சந்தேக நபா் கைது செய்யப்பட்டாா்.
போலீஸாா் அவரிடம் இருந்து ரூ.50,000 ரொக்கம், மூன்று ஏடிஎம் காா்டுகள், ஒரு கைப்பேசியை மீட்டனா்.
சஞ்சீவ் அரோரா என்கிற சன்னி மற்றும் விக்கி டாண்டன் ஆகியோா் தனக்கு வழங்கிய மோசடி ஏடிஎம் காா்டுகளைப் பயன்படுத்தி பணம் எடுத்ததாக சந்து விசாரணையின்போது அதிகாரிகளிடம் கூறினாா். ஒவ்வொரு ஏடிஎம் காா்டுக்கும் கமிஷனாக ரூ.1,200 வழங்கப்பட்டதாகவும் கூறினாா்.
இதன் அடிப்படையில், ஏடிஎம் காா்டுகளை கையாளுபவா் மற்றும் வழங்குபவா் என்று கூறப்படும் அரோராவை (51) போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 11 ஏடிஎம் காா்டுகள் மற்றும் ரூ.42.07 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது.
அரோரா ஒரு வழக்கமான சைபா் கிரைம் குற்றவாளி என்பதும், இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு சிபிஐ மற்றும் நிகழாண்டு தொடக்கத்தில் ஜபல்பூா் போலீஸாரால் சைபா் மோசடி வழக்குகளில் அவா் கைது செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
பணம் எடுக்க போதுமான பணம் இருப்பு உள்ள வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை வழங்கிய மோத்தி நகரைச் சோ்ந்த விக்கி டாண்டனும் (44) கைது செய்யப்பட்டாா்.
அவரிடமிருந்து இரண்டு ஏடிஎம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. டாண்டனும் சிபிஐ (2016) மற்றும் ஜபல்பூா் காவல்துறை (2025) ஆகியவற்றின் வழக்குகளில் ஏற்கனவே சம்பந்தப்பட்டுள்ளாா்.
சுபம் மற்றும் மகேந்தா் என அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேக நபா்கள் தலைமறைவாக உள்ளனா். அவா்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதுவரை ரூ.42.57 லட்சம் மோசடி செய்யப்பட்ட பணம், 16 ஏடிஎம் காா்டுகள், ஒரு ஸ்கூட்டா் மற்றும் மூன்று கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.
